Sunday, December 22, 2024

Latest Posts

அநுர இப்போது’கோட்டா – பகுதி 2’ஆகிவிட்டாரா? சஜித் அணி கேள்வி

“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இருந்ததைப் போன்று பொம்மை பட்டதாரி அமைச்சர்கள் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசிலும் உள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ‘கோட்டாபய பகுதி – 2’ ஆக மாறிவிட்டாரா?.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர், மேலும் குறிப்பிடுகையில்,

“உண்மையில் கலாநிதி பட்டத்தைப் பெற்றுக்கொள்ளாமல், கலாநிதி என்று தன்னைத்தானே கூறிக்கொண்டு சபாநாயகர் மக்களை ஏமாற்றியிருக்கின்றாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த அவமரியாதையைப் போக்கிக்கொள்வதற்கு இனியும் தாமதிக்காமல் உண்மையை வெளிப்படுத்துமாறு சபாநாயகரை வலியுறுத்துகின்றோம். சபாநாயகருக்கு ஏற்படும் அவமானம் நாடாளுமன்றத்துக்கு ஏற்படும் அவமானமாகும்.

சபாநாயகர் மீது மாத்திரமின்றி மேலும் சில அமைச்சர்களது பட்டங்கள் தொடர்பிலும் தற்போது தகவல்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இருந்ததைப் போன்று பொம்மை பட்டதாரி அமைச்சர்களாக தேசிய மக்கள் சக்தி அரசிலும் உள்ளனர். மக்களின் பாரிய ஆணையைப் பெற்றுள்ள கட்சி என்ற ரீதியில் நாட்டுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு ஜே.வி.பிக்கு – தேசிய மக்கள் சக்திக்கு உண்டு.

அதேபோன்று சபாநாயகர் பொய் கூறுகின்றார் என்றால் உடனடியாக அவர் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்துகின்றோம். அன்று கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டபோது, எதிர்க்கட்சி எம்.பியாக அநுரகுமார திஸாநாயக்க கடும் கண்டனங்களை முன்வைத்தார். ஆனால், இன்று அவரது ஆட்சியில் அதே பிரச்சினை ஏற்பட்டுள்ளபோது அவரால் தீர்வை வழங்க முடியாமலிருக்கின்றது. அநுர இப்போது ‘கோட்டா – பகுதி 2’ ஆகிவிட்டாரா?

அரிசி ஆலை உரிமையாளர்களை அழைத்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடியிருந்தார். ஆனால், இன்னும் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை. கோட்டாபய ராஜபக்ஷவின் அதே நாடகத்தை அல்லவா இவரும் அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றார். மக்கள் மீண்டும் ஏமாற்றமடைந்துள்ளனரா? தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசை வலியுறுத்துகிறோம்.” – என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.