இலங்கையில் உள்ள மூன்று சர்வதேச விமான நிலையங்களில் சமீபத்தில் மீள திறக்கப்பட்ட யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் முக்கிய இடத்தை பெறுகிறது.
இங்கு தற்போது இலங்கை – இந்தியா இடையிலான விமானம் இயக்கப்படுகிறது. வடகிழக்கில் இருந்து யுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்து குடியுரிமை பெற்ற பலரும் தமது சொந்த நாட்டுக்கு வருகை தர பலாலி விமான நிலையத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
ஏனைய விமான நிலையங்களில் போன்றே பலாலி சர்வதேச விமான நிலையத்திலும் உள்நாட்டு பிரஜைகள் மற்றும் வெளிநாட்டு பிரஜைகள் என இரு பிரிவாக கடவுச் சீட்டு சோதனை சாதாரணமாக முன்னெடுக்கப்படுகிறது.
எனினும் இலங்கை பிரஜைகளாக இருந்து பின் வெளிநாட்டு பிரஜைகளான நபர்கள் தொடர்பில் ஆழமான தரவு சோதனை முன்னெடுக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு கருதி அவ்வாறு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
ஆனாலும் அந்த தரவு சோதனைக்கு எடுத்துக் கொள்ளும் காலம் அதிகம் என பயணிகள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறான ஒரு பயணியின் தரவுகளை சோதனையிட 20 தொடக்கம் 25 நிமிடங்கள் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பயணிகளின் தரவுகளை சோதனையிட சுமார் ஒரு மணித்தியாலம் செலவாகிறது.
இதனால் பயணிகள், தரவு சோதனை பிரிவில் உள்ள அதிகாரிகளிடம் முரண்படுகின்றனர். அதிகாரிகளும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.
இதுவிடயம் தொடர்பில் லங்கா நியூஸ் வெப் மேற்கொண்ட ஆய்வில், தினமும் காலை வேளையில் குறிப்பாக பலாலி விமான நிலையத்துக்கு விமானம் வந்து செல்லும் நேர காலத்தில் கொழும்பு குடிவரவு மற்றும் குடியகழ்வு தலைமையகத்தில் தரவு சேமிப்பு திருத்தம் முன்னெடுக்கப்படுவதாகவும் அதனால் பலாலி விமான நிலைய தரவு சேமிப்பு செயலியில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த தரவு சேமிப்பு திருத்த பணியை மாலை அல்லது இரவு நேரத்தில் முன்னெடுத்தால் அனாவசிய தாமதத்தை தடுக்க முடியும் என பலாலி சர்வதேச விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணிகளுக்கு தங்கள் பயண சுதந்திரம் மற்றும் உரிமையை பாதுகாக்க வேண்டும்.
மேலும் அதிகளவு தமிழ் பேசும் பயணிகள் வந்து செல்லும் பலாலி விமான நிலையத்தில் சுங்கம் உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் பிற மொழி பேசும் அதிகாரிகள் அதிகம் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் தொடர்பாடல் விடயத்திலும் பெரும் அசௌகரியங்களை எதிநோக்கி வருகின்றனர்.
எனவே இது விடயம் தொடர்பிலும் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வர வேண்டும்.