புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தை வரைவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பணிகள், செப்டெம்பர் மாதத்திற்குள் நிறைவடையு மென, குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட குழு நேற்று (28) நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சில் கூடியது.இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை இரத்துச் செய்து, புதிய சட்ட மூலத்தை வரைவதற்காக அமைச்சரவையின் ஒப்புதலுடன் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் இந்த நிபுணர் குழுவை நியமித்திருந்தார்.நவீன உலகளாவிய பயங்கரவாத சவால்களை எதிர்கொள்வதற்கும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனி நபர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதையும் நோக்காகக் கொண்டு இப்புதிய சட்டமூலம் கொண்டு வரப்படவுள்ளது.
புதிய சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தர நிலைகளைப் பின்பற்றுவதற்கு ஏதுவான வழி பிறந்துள்ளது.