விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் ஓகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு கடந்த ஓகஸ்ட் 19ஆம் திகதி உத்தரவிடப்பட்டது.
2022 ஆம் ஆண்டு நாடு முழுவதும் இடம்பெற்ற போராட்டங்களின் போது தீக்கிரையாக்கப்பட்ட செவனகல-கிரிப்பன் வெவ பகுதியில் உள்ள அரசாங்க காணியில் உள்ள சேதமடைந்த கட்டடத்திற்கு மற்றுமொரு நபர் மூலம் இழப்பீடு பெறப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக அவர் கடந்த ஓகஸ்ட் 06 ஆம் திகதி நுகேகொடையில் உள்ள அவரது இல்லத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
2022 மே 09 ஆம் திகதி இடம்பெற்ற பொதுமக்கள் கிளர்ச்சியின் போது, செவனகல-கிரிப்பன் வெவ பகுதியில் உள்ள இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த கட்டடம் உள்ளிட்ட பல சொத்துகள் சேதமடைதிருந்தன.
சேதமடைந்த சொத்துக்களுக்கான இழப்பீட்டுச் செயல்பாட்டின் போது, அந்தச் சொத்து இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமானது என்று அடையாளம் காணப்பட்டமை காரணமாக, இழப்பீடு வழங்குவது நிராகரிக்கப்பட்டது. இருப்பினும், முடிவை மீறி சஷீந்திர ராஜபக்ஷ, சேத மதிப்பீட்டு அலுவலகத்தில் நியமிக்கப்பட்ட சில அரச அதிகாரிகள் மீது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, குறித்த இழப்பீடு பெறும் முயற்சியில் தேவையற்ற செல்வாக்கைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதற்கமைய, மேற்படி இழப்பீட்டைப் பெறுவது தொடர்பாக ஊழல் குற்றமிழைத்தமை, அதற்காக சதி செய்தமை, மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான அரசாங்கச் சொத்துகளை சட்டவிரோதமாகவும் மோசடியாகவும் பயன்படுத்தியமை தொடர்பில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.