நேபாளத்தில் இடம்பெற்ற கலவரத்தின் போது, தன்னுயிரை பொருட்படுத்தாது, பலரின் உயிரை காப்பாற்றிய இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு, தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பாராட்டுக் தெரிவித்த கடிதத்தை, தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா இன்று இ.தொ.காவின் தலைமையகமான சௌமியபவனில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானிடம் நேரில் கையளித்தார்.


இந்த பாராட்டுக் கடிதத்தில்,
நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் போராட்டக் காரர்களால் தீயிடப்பட்ட தனியார் விடுதியில் தங்கி இருந்த இந்தியர்களைக் காப்பாற்றிய தங்களது துணிவையும், தியாக உணர்வையும் பாராட்டுகிறேன்.
மானுடத்தின் மீதான பெருங்கருணையே இக்கட்டான தருணங்களில் துணிவாக வடிவெடுக்கிறது என்பதற்குத் தங்களது இந்தச் செயற்கரிய தீரச்செயலே சான்று!
தங்களது தியாக உணர்வையும், தீரச் செயலையும் மீண்டும் பாராட்டி வாழ்த்துகிறேன்! என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

சௌமிய பவனில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தி. மு.க பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா கருத்து தெரிவிக்கையில்,
தமிழக முதலமைச்சரால் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்ட இக்கடிதத்தை, இலங்கைக்கு சென்று நேரடியாக செந்தில் தொண்டமானிடம் கையளிக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் நான் இலங்கைக்கு வருகை தந்து அவரிடம் இந்த கடிதத்தை நேரடியாக கையளித்தேன் என அப்துல்லா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அதற்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவிக்கையில், தமிழக முதலமைச்சர் தமிழக மக்களுக்கு மாத்திரமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்களின் தலைவராக காணப்படுகிறார். அவர் என் சேவையை பாராட்டி வாழ்த்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி எனவும், அந்த கடிதத்தை பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா எடுத்து வந்தமை மேலும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும் இக்கடிதத்தை கையளிக்கும் நிகழ்வில் இ.தொ. கா தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன்,பிரதி தலைவர் கணபதி கனகராஜ், தேசிய அமைப்பாளர் சக்திவேல், பிரதி பொதுச் செயலாளர் செல்லமுத்து,உப தலைவர்களான சிவஞானம், சச்சிதானந்தம்,திருக்கேஸ் செல்லசாமி, ,ராஜாமணி மார்கிரட், போசகர் சிவராஜா, சட்ட ஆலோசகர் மாரிமுத்து, சபை தலைவர்களான வேலு யோகராஜ், ராஜமணி பிரசாத்,ரதி தேவி, பிரதி மேயர் யோகா நோர்வூட் பிரதேச சபை முன்னாள் தலைவர் ரவி குழந்தைவேல் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துக் கொண்டனர்.
