மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான முதலாளிமார் சம்மேளனத்தின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு எதிர்வரும் 9 ஆம் திகதி வரை அரசாங்கம் அவகாசம் வழங்கியுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
ஹட்டன் தொழில் திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இதுவரை காலமும் உங்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்தவர்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. வாழ்க்கைத் தரம் மாறுமானால் அவர்களுக்கு அதிகாரத்தில் தொடர்ந்தும் இருந்திருக்க முடியாது.
எமது நாட்டிற்கு டொலரை கொண்டு வரும் முக்கிய பொருளாதாரமாக பெருந்தோட்டத்துறையும் இருக்கின்றது. எனவே நாட்டின் பொருளாதார வளர்ச்சி எனும் பார்க்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமானதாகும்.
அரசாங்கம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் கவனம் செலுத்தி பல மட்டங்களில் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். இறுதியாக கடந்த 9ஆம் திகதி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது.
அதில் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நீண்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டிருந்தது.
தற்போது நாளாந்த சம்பளமாக 1350 ரூபாயும் மேலதிகமாக பறிக்கப்படும் தேயிலை கிலோகிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் வீதமும் வழங்கப்படுகின்றது.
எனவே எதிர்வரும் 9 ஆம் திகதி வரையான ஒரு மாத காலம் வழங்கி முதலாளிமார் சம்மேளனத்தின் நிலைப்பாட்டை கோரியுள்ளோம். இந்த கலந்துரையாடல் மூலம் இணக்கப்பாடு ஒன்றை எட்டவே அரசாங்கம் என்ற வகையில் நாம் எதிர்பார்க்கின்றோம்.
தொழிநுட்பம் மற்றும் புள்ளிவிபரத்தின் அடிப்படையில் கடந்த காலத்தில் தேயிலை தொழிற்துறை பாரிய இலாபம் ஈட்டியுள்ளது. நட்டம் ஏற்பட்டிருக்குமானால் அதற்கு நிர்வாகமே காரணம்.
உரிய வகையில் தேயிலையை பராமரித்திருக்க அவர்களே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
சம்பளம் மட்டுமல்ல தொழிலாளர்களின் ஏனைய பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்களையும் ஒவ்வொன்றாக தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.