போதைப்பொருளுக்கு எதிரான தேசிய வேலைத்திட்டம் பலமானதாக எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு அச்சமடைந்தே எதிர்கட்சியினர் அரசாங்கத்துக்கு எதிரான போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுக்களின் உறுப்பினர்கள் பல பெயர்களை குறிப்பிட்டுள்ளனர். உரிய நேரத்தில் அவற்றை வெளிப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். போதைப்பொருள் வர்த்தகர்கள், பாதாள உலகக் குழுக்கள் மற்றும் சமூக விரோத குற்றவாளிகளுக்கு புதிய சிறைச்சாலைகளை உருவாக்குவோம் என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற போதைப்பொருள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களை ஒழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் மற்றும் சட்டரீதியான கட்டமைப்பை வலுப்படுத்துதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கும் போது எதிர்க்கட்சிகளின் சில உறுப்பினர்கள் கலக்கமடைந்து துள்ளிக் குதிக்கின்றார்கள்.நாடு சுதந்திரமடைந்த பின்னர் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களில் சிலர் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கண்டுக்கொள்ளவில்லை. சிலர் தமது சுய தேவைகளுக்காக பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களை பலப்படுத்தி அதனூடாக இலாபமடைந்தார்கள் என்பதே உண்மை.
போதைப்பொருளுக்கு எதிரான தேசிய நடவடிக்கைகளை எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளோம். அதற்கு அச்சமடைந்தே எதிர்கட்சியினர் அரசுக்கு எதிரான போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். அதனை நாம் பொருட்படுத்தப்போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
