அமைச்சர் விஜித ஹேரத்தின் பாராளுமன்ற உரை – 2025.11.14
அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஸ்திரமடைந்துள்ளோம். நாட்டில் தற்போது இனவாதம், மதவாத முரண்பாடுகள் கிடையாது. ஆனால் கடந்த காலங்களில் இவ்வாறான நிலை இருக்கவில்லை. இன்று நாட்டில் தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். இந்த நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக காணப்படும் மலையக தமிழ் மக்கள் 200 ஆண்டுகாலமாக பல துயரங்களை எதிர்கொண்டுள்ளனர். இவர்களின் நலன், உரிமைகளுக்காக நாங்கள் முன்னிலையாகியுள்ளோம். மலையக மக்களுக்கு காணி இல்லை, வீடு இல்லை. வாழ்வாதாரத்துக்குரிய சம்பளமில்லை. இதுவே மலையக மக்களின் பிரதான 3 பிரச்சினைகள்.
200 வருடகாலமாக நாட்டுக்கு உழைத்துக் கொடுத்து இலவச கல்வி, இலவச சுகாதாரம் உட்பட ஏனைய சிறப்புரிமைகளை நாம் அனுபவிக்கும் பொருளாதார ஸ்திரப்படுத்தலை மலையக மக்கள் ஏற்படுத்தினார்கள். தமது கலாசார மரபுகளுக்கு அமைய மலைய மக்கள் முறையாக அடையாளப்படுத்தப்படவில்லை. அவர்களை அடிமைகளாகவே கருதி ஆட்சியாளர்கள் செயற்பட்டார்கள்.
பெரும்பாலான அரசியல்வாதிகள் மலையக மக்களை ஏமாற்றினார்கள். இருண்ட யுகத்தையே மலையக மக்கள் இதுவரை காலமும் எதிர்கொண்டார்கள்.
எமது ஹட்டன் பிரகடனத்தில் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் மலையக மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க முன்னிலையாகும் என்பதை தெளிவாக குறிப்பிட்டிருந்தோம். நாட்டில் ஏனைய மக்களுக்கு கிடைக்கப்பெறும் உரிமைகள் மலையக மக்களுக்கும் எவ்வித பாரபட்சமுமின்றிய வகையில் கிடைக்கப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
வரலாற்றில் முதன் முறையாக பெருந்தோட்ட மக்களை ‘இலங்கை மலையக மக்கள்‘ என்று நாங்கள் அடையாளப்படுத்தினோம். இதுவரை காலமும் இந்திய வம்சாவளி பிரஜைகள் என்றே அழைக்கப்பட்டார்கள். இரண்டாம் தரப்பினராகவே அவர்களை ஆட்சியாளர்கள் பார்த்தார்கள். மலையக மக்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுத்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மலையக மக்களுக்கு 1970 ஆண்டு வரையான காலப்பகுதியில் வாக்குரிமை கூட வழங்கப்படவில்லை. ஆனால் மலையக மக்களின் அரசியல் ஆதரவை மாத்திரம் பெற்றுக்கொள்வதற்கு பிரதான இரண்டு அரசியல் கட்சிகளும் முரண்பட்டுக் கொண்டன.
இதுவரை காலமும் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் மலையக மக்களின் சம்பள பிரச்சினையை வெறும் அரசியல் பிரசாரமாகவே கருதின. சம்பளத்தை அதிகரிப்பதாகக் குறிப்பிட்டு அந்த மக்களை ஏமாற்றின.
மலையக மக்களின் சம்பள விவகாரம் குறித்து பெருந்தோட்ட கம்பனிகளுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம். இதற்கமைய கம்பனிகள் தரப்பில் இருந்து 200 ரூபா சம்பள வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அது போதுமானதல்ல, இன்று தச்சு வேலை செய்யும் தொழிலாளர்கள் கூட நாளாந்தம் 3000 முதல் 4000 ரூபா வரை சம்பளம் பெறுகிறார்கள். மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் விதமாகவே 200 ரூபா சம்பளத்தை வழங்க நாங்கள் தீர்மானித்தோம். இந்த தொகையும் போதாது.
திறைசேரி ஊடாக பெருந்தோட்டத்துறை அமைச்சுக்கு 5000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. தோட்ட கம்பனிகளுக்கு இந்த நிதி வைப்பிலிடப்படவில்லை. எதிர்க்கட்சியினர் இதனை தவறாக விளங்கிக் கொண்டுள்ளார்கள். தோட்ட தொழில் துறைமையும், மலைய க மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தும் சட்ட அதிகாரம் பெருந்தோட்ட அமைச்சுக்கு உண்டு. இதில் எவ்வித சட்ட சிக்கலும் கிடையாது.
மலையக மக்களுக்கான சம்பள அதிகரிப்பை உயர்நீதிமன்றத்திலோ அல்லது இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவிலோ சவாலுக்குட்படுத்த முடியாது.* அமைச்சு மட்டத்தில் பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. அஸ்வெசும நலன்புரித் திட்டத்துக்கும் இவ்வாறே நிதி ஒதுக்கப்படுகிறது. வரி செலுத்தும் மக்களின் வரிப்பணம் தான் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.
கரும்பு விவசாயிகள், நெல் விவசாயிகளுக்கும் இந்த அடிப்படையில் தான் அமைச்சு ஊடாக நிவாரணம் வழங்கப்படுகிறது. இதனடிப்படையில் தான் பெருந்தோட்டத்துறை அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட 5000 மில்லியன் ரூபாவில் இருந்து மலையக மக்களுக்கு சம்பளம் வழங்க 200 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. வருகை ஊக்கப்படுத்தல் கொடுப்பனவாகவே 200 ரூபா வழங்கப்படுகிறது. இதற்கமைய மலையக மக்களின் நாளாந்த சம்பளம் 400 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
எதிர்க்கட்சியின் எம்.பி.க்களான மனோ கணேசன், இராதா கிருஸ்ணன், திகாம்பரம், ஜீவன் தொண்டமான் ஆகியோர் எவ்வாறு தற்றுணிபுடன் எதிர்க்கட்சியில் இருக்கிறார்கள். 200 ரூபா அதிகரிப்புக்கு எவருக்கும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. எதிர்ப்பு தெரிவித்து விட்டு இவர்களால் மலையகத்துக்கு செல்லவும் முடியாது. மலையக அரசியல்வாதிகள் எவருக்கும் இந்த சம்பள அதிகரிப்புக்கு எதிராக வாக்களிக்க முடியாது. எதிராக வாக்களித்து விட்டு மலையக மக்கள் மத்தியில் இவர்களால் செல்லவும் முடியாது, 200 சம்பள அதிகரிப்புக்கு எதிர்ப்பு செய்து ஐக்கிய மக்கள் சக்தி வரலாற்று ரீதியிலான தவறை இழைத்துள்ளது.
