வட மாகாண மனிதாபிமான உதவித்திட்டம் மற்றும் யாழ்ப்பாணத்தில் செயற்கைக்கால் பொருத்தும் முகாமின் ஆரம்பம் வடமாகாணத்திலுள்ள மீனவர்கள் மற்றும் அவர்களின்
குடும்பத்தினருக்கான மனிதாபிமான உதவிகளை வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்று, இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் இணைந்து இந்திய உயர் ஸ்தானிகர் மேன்மைதங்கிய கோபால் பாக்லே அவர்களால், 2022 மார்ச் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவியின்கீழ் இந்த நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார்
ஆகிய மாவட்டங்களில் உள்ள 1200 குடும்பங்கள் இந்நிகழ்ச்சி
திட்டத்தின்கீழ் உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய
பொருட்களை பெற்றுக்கொள்கின்றனர்.
இந்நிலையில் இத்திட்டத்தின் அங்குரார்ப்பணத்தின்போது யாழ் மாவட்டத்திலுள்ள பயனாளிகளுக்கு இப்பொருட்கள் கையளிக்கப்பட்டிருந்தன. மாகாணத்தின் ஏனைய
பகுதியிலுள்ள பயனாளிகளுக்கு எதிர்வரும் நாட்களில் இந்நிகழ்ச்சித்
திட்டம் மூலம் பொருட்கள் விநியோகிக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் உரை நிகழ்த்தியிருந்த உயர் ஸ்தானிகர், இலங்கை
மக்களின் நலன்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட சகோதர நாடே
இந்தியா என்று கோடிட்டு காட்டியதுடன் இவ்வாறான மனிதாபிமான
உதவிகளை எதிர்காலத்திலும் இந்தியா தொடர்ந்து வழங்கும் எனவும்
குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் இரு நாடுகளினதும் மீனவ சமூகங்களால்
எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இந்திய மற்றும்இலங்கை அரசாங்கங்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாரம்பரியங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டியதன் தேவை தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்த அவர், கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில் இந்திய மீனவர்களும் ஏனைய யாத்திரிகர்களும் கலந்து கொள்வதற்கு வழிசமைத்தமைக்காக மீன்பிடித்துறை அமைச்சர் கௌரவ டக்ளஸ்
தேவானந்தா உள்ளிட்ட இலங்கையின் தலைமைத்துவத்திற்கு
நன்றியினையும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை இந்த மனிதாபிமான உதவித் திட்டத்தினை முன்னெடுத்த இந்திய அரசாங்கத்திற்கு நன்றியினை தெரிவித்த கௌரவ அமைச்சர் தேவானந்தா அவர்கள் அடுத்த வருடம் கச்சதீவு ஆலய திருவிழாவில் கலந்து கொள்ளும் இந்திய யாத்திரிகர்களின் எண்ணிக்கை ஆயிரங்களாக மாற்றமடையவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
செயற்கை கால்களை பொருத்துதல் மற்றும் அதனுடன்
தொடர்புடைய ஏனைய உதவிகளை விசேட தேவையுடையோருக்கு
வழங்கிவரும் உலகின் பாரிய அமைப்பான பகவான் மகாவீர் விக்லங்
சகாயதா சமிதியால் நடத்தப்படும் செயற்கை கால் பொருத்தும்
முகாமினையும் உயர் ஸ்தானிகர் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து
வைத்தார். இந்திய அரசாங்கத்தின் பூரண ஆதரவுடன்
நடைபெற்றுவரும் இந்த முகாம் யாழ் மாவட்ட அபிவிருத்தி
குழுவுடன் இணைந்து நடத்தப்படுகின்றது.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.
ரணவிரு சேவா அதிகார சபையுடன் இணைந்து இந்திய
அரசாங்கத்தின் அனுசரணையின் கீழ் கம்பஹாவில் பகவான் மகாவீர் விக்லங் சகாயதா சமிதி அமைப்பினால் நடத்தப்பட்ட முகாமை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இந்த செயற்கைக்கால் பொருத்தும் முகாம் ஒழுங்கமைக்கப்பட்டுளளது. கம்பஹாவில் நடைபெற்ற இந்த முகாமில் அதிகளவில் இலங்கை ஆயுதப் படைகளைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டிருந்தன.
இதில் விசேடதேவையுடைய 500க்கும் அதிகமானோருக்கு ஜெய்ப்பூர் கால் பொருத்தப்பட்டிருந்தது. 2010 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளிலும் வவுனியா மர்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இந்திய அரசாங்கம் இரு முகாம்களை நடத்தியிருந்தமை நினைவில்
கொள்ளப்படவேண்டியதொன்றாகும். இந்த முகாம்கள் மூலம் 2500க்கும் அதிகமானோர் பயனடைந்திருந்தனர்.
இந்திய அரசாங்கத்தால் மக்களை இலக்காகக்கொண்டு
இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பங்குடைமை
திட்டங்களின்கீழ் கவனம் செலுத்தப்படும் ஒரு பிராந்தியமாக வட
மாகாணம் உள்ளது. வீடு, கல்வி, சுகாதாரம், வாழ்வாதார அபிவிருத்தி
மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி போன்ற நாளாந்த மனித வாழ்வின் பல்பரிமாணங்களையும் கொண்ட பல்வேறு திட்டங்கள் இங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் ஏனைய பல்வேறு திட்டங்களும் அமுலாக்கத்தின் பல்வேறு மட்டங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.