முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொது சொத்து சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (28) கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளது.
2023 ஆம் ஆண்டு அவர் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்தில் தனிப்பட்ட பயணம் மேற்கொண்டபோது, ஒரு நாள் ஒன்றரை காலப்பகுதிக்குள் சுமார் 1 கோடியே 66 இலட்சம் ரூபாய் அரசுப் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டி, கடந்த ஆண்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கின் அடிப்படையில் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
எனினும், ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், குறித்த பயணம் இங்கிலாந்தின் வுல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகம் வழங்கிய உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வ பயணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக, குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று சமீபத்தில் இங்கிலாந்து சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
