Friday, September 20, 2024

Latest Posts

ஜீவன் அதிரடி அறிவிப்பு, அரசாங்கத்தின் மீது கடும் குற்றச்சாட்டு

அரசாங்கம் மக்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறும் பட்சத்தில், அரசாங்கத்திலிருந்து தாம் வெளியேறுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

கொட்டகலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தமது தீர்மானத்தை எதிர்வரும் ஓரிரு தினங்களில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

“ இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசின் பங்காளிக்கட்சியாக இருந்தாலும், மக்களை பாதுகாப்பதே எமது முதன்மை நோக்கமாகும். அந்தவகையில் ஜனாதிபதியின் வீட்டுக்கு செல்லும் மிரிஹான வழியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் மக்கள்மீது நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது தவறான செயலாகும். என்னதான் வதந்திகள் பரவினாலும், முறையான விசாரணையின்றி மக்களை கைது செய்து, துன்புறுத்துவது நியாயம் அல்ல.

சஜித் பிரேமதாச தலைமையில் தலவாக்கலையில் நாளைய தினம் போராட்டமொன்று இடம்பெறவுள்ளது. இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை . ஏனெனில் சமையல் எரிவாயு, எரிபொருள் இன்றி மக்கள் இன்று துன்பப்படுகின்றனர். இதற்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்குகின்றனர். அதன் பின்னணியில் எந்த கட்சி இருந்தாலும் நாம் ஆதரவு. மிரிஹான போராட்டத்தின்போது ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையும் கண்டிக்கின்றோம். அது நியாயமற்ற செயலாகும். மக்களுக்காக முன்னிலையான சட்டத்தரணிகளுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அரசுக்கு எமது எதிர்ப்பை காட்டிவிட்டோம். சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணித்தோம். ஆனால் அமைச்சு பதவி கிடைக்கவில்லை என்பதால்தான் இ.தொ.கா. இப்படி செயற்பட்டது என சிலர் வதந்தி பரப்பினர்.

இராணுவத்துக்காக 10 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்கலைக்கழகம் அமையவுள்ள இடமும் உள்ளடங்குகின்றது. இதனை நாம் எதிர்த்தோம். மக்களுக்கு வேலை நடக்கனும், நாட்டில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். மக்களுக்கு சார்பான முடிவையே நாம் எடுப்போம். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல்போனால் அரசிலிருந்து காங்கிரஸ் வெளியேறும். இன்னும் ஓரிரு தினங்களில் முடிவு அறிவிக்கப்படும்.” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.