இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 3.1 பில்லியன் டொலராக அதிகரிக்கும்!

0
195

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ளாமலே வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்தும் சக்தி அரசாங்கத்திற்கு உள்ளதென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்தவாரத்திற்குள் சீன மத்திய வங்கியின் மூலம் இலங்கைக்கு 150 கோடி கடனுதவி கிடைக்கவுள்ளதாகவும் அந்த நிதி இலங்கைக்கு கிடைத்தவுடன் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 3.1 பில்லியன் டொலராக அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின்போதே மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு தெரவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி உதவியைப் பெற்றுக்கொள்ளாமலே வெளிநாட்டு கடன்கனை மீளச் செலுத்துவதற்கான சக்தி அரசாங்கத்திற்கு உள்ளது.

மேலும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தாங்கிக்கொள்ளும் நிலையிலேயே அரசாங்கம் உள்ளதோடு முன்னாள் அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ள கடன் தவணையை மீளச் செலுத்த நேர்ந்துள்ளமையே தற்போதைய தற்காலிக பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைந்துள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அதுவும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை எற்படுத்தியுள்ளது.

நாட்டிற்கு சுற்றுலாத் துறை மூலம் 4.5 பில்லியன் வருமானம் கிடைத்து வந்துள்ளது. தற்போது நாட்டில் 1.6 பில்லியன் டொலர் வௌிநாட்டு கையிருப்பாக உள்ளது. அதற்கிணங்க எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதிக்குள் மூன்று மில்லியன் டொலராக அது அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here