உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 5 நீதிபதி பதவிகள் காலியாக உள்ளபோதிலும், அரசு பல மாதங்களாக அவற்றை நிரப்பாமல் தாமதப்படுத்தி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்று (11) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “உச்ச நீதிமன்றத்தில் 4 காலிப்பணியிடங்கள் எட்டு மாதங்களாக உள்ளன. அவை இன்னும் நிரப்பப்படவில்லை. இன்று உள்ள நிலவரப்படி மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் 5 காலிப்பணியிடங்கள் உள்ளன. மொத்தமாக 9 நீதிபதி பதவிகள் காலியாக உள்ளன” எனக் கூறினார்.
மேலும், இதுவரை நாட்டின் நீதித்துறை மூப்புரிமை அடிப்படையில், கட்சித் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வந்ததாகவும், தற்போது நீதிபதிகள் நியமனங்களை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தொடர்பிலும் கருத்து தெரிவித்த அவர், “நீதிபதிகளுக்கு 67 வயது வரை பதவிக்கால நீட்டிப்பு வழங்கப்பட்டால், மருத்துவர்கள், நிர்வாக சேவை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் அதே கோரிக்கையை முன்வைப்பார்கள். ஒவ்வொரு பதவியிலும் வாழ்நாள் முழுவதும் இருக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட காலம் பணியாற்றி, பின்னர் கௌரவமாக ஓய்வு பெற வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
