இலங்கை அரசு பிரபாகரனை பயங்கரவாதியாக பார்த்தாலும், தமிழ் மக்கள் அவரை அவ்வாறு பார்க்கவில்லை என ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சசந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
பிரபாகரனின் புகைப்படம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறையில் காணப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டு, ஒன்றிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் தற்போது அவர்கள் மீது மீண்டும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது . இது கண்டிக்கத்தக்க விடயம். படம் வைத்திருந்தால் பிரச்சினை என்றால் எத்தனை பேரை இவர்கள் இன்னமும் கைது செய்ய வேண்டும். இதனடிப்படையில் , இளைஞர்கள் கைது செய்யப்படுவதும் கண்டிக்கத்தக்கது .
இளைஞர்களின் மீது உள்ள இப்படியான வழக்குகள் வாபஸ் பெற வேண்டும். மீண்டும் பயங்கரவாத சட்டத்தை இறுக்கமாக்கும் முயற்சியில் அரசு எடுப்பட்டுள்ளது. அரசு பிரபாகரனை பயங்கரவாதியாக கூறினாலும், தமிழ் மக்கள் அவரை அவ்வாறு பார்க்கவில்லை.
“சேகுவரே” போராளியின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட ரீசேட்களை சிங்கள இளைஞர்களும் அணிந்துகொள்கின்றனர். அப்போது அவர்களை இந்த அரசு கைது செய்யுமா? காலத்துக்கு காலம் அரசு தனக்கு வேண்டாதவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.