மாகாண சபைத் தேர்தலை எந்த தேர்தல் முறையின் கீழ் நடத்த வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவிலிருந்து விலகுவதற்கு எதிர்க்கட்சிதீர்மானித்துள்ளது.
குறித்த குழுவின் பதவிக்காலம் ஏற்கனவே 9 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அதன் காலத்தை மீண்டும்நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட குழுவின் காலத்தை டிசம்பர் 17ஆம் திகதிவரை நீடித்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (11) நாடாளுமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின்பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, குழு ஆரம்பிக்கப்பட்டு தற்போது 9 மாதங்கள் கடந்துள்ளதாகவும், அதன் செயற்பாடுகளை அவதானிக்கும்போது தேர்தலை நடத்துவதற்குப் பதிலாக காலதாமதத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாகவே அது இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்த யோசனைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் தாங்கள் இணக்கம் தெரிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
“காலத்தை இழுத்தடித்து, நேரத்தை வீணடிக்கும் இந்தக் குழுவில் எதிர்க்கட்சி என்ற வகையில் நாங்கள் இனிமேல் பங்கேற்க மாட்டோம்” என ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், நீண்ட காலமாக இடம்பெறாமல் உள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கானநடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான அரசியல் முரண்பாடு மேலும் தீவிரமடைந்துள்ளது.
