ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு வௌிக்கொணர்ந்த ஊழல்மிக்க கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய ஆவணக்கோவைகளுடன் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டார்.
‘நாட்டை நாசமாக்கிய திருட்டுக் கும்பலை ஒட்டுமொத்தமாக அம்பலப்படுத்துதல்’ எனும் தலைப்பில் கொழும்பு மன்றக் கல்லூரியில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது, உலகில் ஏதேனும் ஒரு இடத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் ஊடகங்கள் அறிக்கையிடுவதாக இருந்தாலோ அல்லது ஏதேனும் ஒரு ஆய்வு நிறுவனம் ஊழல் தொடர்பில் ஆய்வுகளை நடத்தினாலோ அதில் இலங்கையும் அகப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
அவ்வாறானதொரு சம்பவமாக அவர் ஜாலிய விக்ரமசூரியவின் விவகாரத்தை பின்வருமாறு எடுத்துக்காட்டினார்.
ஜாலிய விக்ரமசூரிய என்பவர் மஹிந்த ராஜபக்ஸவின் உறவுமுறை சகோதரராவார். இந்த மே மாதம் ஜாலிய விக்ரமசூரியவிற்கு எதிரான வழக்கின் இறுதித் தீர்ப்பு அமெரிக்காவில் வழங்கப்படவுள்ளது. அமெரிக்காவிலுள்ள தூதரகத்தின் கொள்வனவிற்காக 6.2 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் 3.3 மில்லியன் சூறையாடப்பட்டுள்ளது. 55% சூறையாடப்பட்டுள்ளது. அந்த விடயத்தை அமெரிக்க நீதிமன்றத்தில் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். தரகர் கூலி பெற்றதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
என அனுரகுமார குறிப்பிட்டார்.
பண்டோரா ஆவணக் கசிவு விவகாரம் தொடர்பிலும் அனுரகுமார கருத்துத் தெரிவித்தார். இதன்போது, ஆவணத்தில் திரு நடேசன் மற்றும் நிருபமா குடும்பத்தாருக்கு 160 மில்லியன் டொலர் சொந்தமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
திரு நடேசனின் பெயரில் பசில் ராஜபக்ஸவின் அநேகமான சொத்துக்கள் இருந்ததை தாம் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியதை அவர் நினைவுகூர்ந்தார்.
கிங் நில்வலா என்ற பிரச்சித்திபெற்ற கொடுக்கல் வாங்கல் நடைபெற்றது. அதில் மொத்தமாக 4,100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. ஒரு பிடி மண் கூட வெட்டப்படவில்லை. அந்தப் பணம் China National Machinery என்ற நிறுவனத்திற்கே வழங்கப்பட்டது. அந்த நிறுவனத்திற்கு ஹாங்காங்கில் வங்கிக்கணக்கொன்று உள்ளது. அந்த வங்கிக் கணக்கு இலக்கம் என்னிடம் உள்ளது. இந்த கோவையில் உள்ளது. அந்த வங்கிக் கணக்கில் இருந்து ROOD International என்ற நிறுவனத்திற்கு பணம் விடுவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் திரு. நடேஷனுக்கு சொந்தமானது. அந்த நிறுவனம் கொள்ளுப்பிட்டியில் உள்ள வங்கி ஒன்றுக்கு பணம் அனுப்பியது. இலங்கையில் உள்ள அந்த வங்கியின் பணம் மல்வானையில் காணியை கொள்வனவு செய்வதற்காக பயன்படுத்தப்பட்டது
என அனுரகுமார தெரிவித்தார்.
இதேவேளை, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மேற்கொண்ட எயார் பஸ் விசாரணை குறித்தும் அனுரகுமார திசாநாயக்க விடயங்களை வௌிக்கொணர்ந்தார்.
இலங்கையும் பிரான்ஸ் எயார் பஸ் நிறுவத்திடம் எயார் பஸ்களை கொள்வனவு செய்தமையை சுட்டிக்காட்டிய அவர், அதன் உடன்படிக்கை தொடர்பிலான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான கூட்டம் பத்தரமுல்லையில் உள்ள சமல் ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே நடைபெற்றதாகவும் தெரிவித்தார். சமல் ராஜபக்ஸவின் மகனும் அதன் பணிப்பாளர் சபையில் உறுப்பினராக இருந்ததையும் அனுரகுமார சுட்டிக்காட்டினார்.
இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய கொள்வனவே இது. இந்த கொள்வனவின் போது A330 ரக விமானங்களை விநியோகிப்பதற்கு ஒரு மில்லியன் டொலர் வீதமும் A350 ரக விமானங்களை விநியோகிப்பதற்கு 1.16 மில்லியன் டொலர் வீதமும் குத்தகைக்கு பெறப்படும் நான்கு விமானங்களுக்காக 3 இலட்சம் டொலர் வீதமும் கப்பம் செலுத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. மொத்த கப்பம் 16.18 மில்லியன் டொலராகும். விசாரணைகள் தொடர்ந்தபோது இந்த 16 மில்லியன் டொலரும் கிடைக்கவில்லை. காரணம் அரசாங்கம் கவிழந்தபோது 2 மில்லியன் டொலர் முற்பணம் மாத்திரமே செலுத்தப்பட்டிருந்தது. அந்த இரண்டு மில்லியன் டொலர் முற்பணம் புரூணையில் உள்ள அப்போதைய எயார் லங்காவின் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேனவின் மனைவியின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டிருந்தது. புரூணையில் இந்த இரண்டு மில்லியன் டொலரும் அவுஸ்திரேலியாவில் உள்ள வங்கிக் கணக்கொன்றுக்கு மாற்றப்பட்டது. அவுஸ்திரேலிய வங்கிக் கணக்கில் இருந்து இலங்கையிலுள்ள மூன்று வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பிவைக்கப்பட்டது. அதில் ஒரு வங்கிக் கணக்கின் உரிமையாளரே நிமல் பெரேரா.
என அவர் மேலும் கூறினார்.
அந்த எயார் பஸ் உடன்படிக்கையை இரத்து செய்வதற்கு நல்லாட்சி எனப்படுகின்ற அரசாங்கம் அதிக முயற்சி மேற்கொண்டது எனவும் அதனை இரத்து செய்வதற்காக 115 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதனை இரத்து செய்வது தொடர்பில் எவ்வித அமைச்சரவை அனுமதியும் பெறப்படவில்லை எனவும் அனுரகுமார கூறினார்.