இலங்கையில் செயல்பட்டு வரும் தனியார் எரிபொருள் நிறுவனங்களான லங்கா ஐஓசி (Lanka IOC), சினோபெக் (Sinopec) மற்றும் ஷெல் (Shell) ஆகிய நிறுவனங்களுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தங்களை எதிர்காலத்தில் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (11) இப்பாகமுவவில் நடைபெற்ற “எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டுக்கு நல்வாழ்வு” என்ற மக்கள் பேரணியில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
“தற்போது எமது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்கிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் அந்த விலைக்கு எரிபொருளை விற்பனை செய்ய முடியாது எனக் கூறுகின்றன.
முன்னர் என்ன நடந்தது? அரசாங்கத்தின் எரிபொருள் விலை அதிகமாகவும், தனியார் நிறுவனங்களின் விலை குறைவாகவும் இருந்தது. ஆனால், இன்று அரசாங்கத்தின் எரிபொருளே குறைந்த விலையில் கிடைக்கிறது. தனியார் நிறுவனங்களால் அந்த விலைக்கு விற்பனை செய்ய முடியவில்லை.
ஒரு நிறுவனம் டீசல் விலையை 132 ரூபாயால் அதிகரிக்குமாறு கோரியது. மற்றொரு நிறுவனம் 116 ரூபாயால் அதிகரிக்குமாறு கோரியது. ஆனால், நாங்கள் அவ்வாறு விலையை அதிகரிக்கவில்லை.
மாறாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக 70 ரூபாய் மானியத்தை வழங்கி, டீசல் விலையை சுமார் 10 ரூபாயால் மாத்திரம் அதிகரித்து, மக்களுக்கு மேலதிக சுமையை ஏற்படுத்தாமல் நிலைமையைக் கையாள்வதாகத் தீர்மானித்தோம்.
தற்போது தனியார் நிறுவனங்களின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. விலையை அதிகரிக்காவிட்டால் எரிபொருளை விற்பனை செய்யமாட்டோம் என அவர்கள் கூறுகின்றனர்.
இதற்கு எதிராக எம்மால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. அந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டபோது கைச்சாத்திடப்பட்ட பழைய ஒப்பந்தங்களில் எம்மைக் கட்டுப்படுத்தும் சில நிபந்தனைகள் உள்ளன. எனவே, அந்த ஒப்பந்தங்களைத் திருத்த நடவடிக்கை எடுக்கிறோம்.
டீசல் சந்தையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பங்கு முன்னர் 58 சதவீதமாக இருந்தது. இன்று அது 77 சதவீதமாக அதிகரித்துள்ளது.
எஞ்சியுள்ள 23 சதவீத சந்தையையும் தனியார் நிறுவனங்களால் நிர்வகிக்க முடியாவிட்டால், அதனையும் நாமே மேற்கொள்வோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நாங்கள் அந்த நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளோம். அவர்கள் விரும்பினால் தாங்கள் கோரும் விலையில் விற்பனை செய்யலாம். நாங்கள் எமது விலையில் விற்பனை செய்வோம். இதற்கு வேறு பதில் இல்லை” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
