இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண புதுடெல்லியில் பேச்சுவார்த்தை!

0
18

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் காண்பதற்காக இரு நாடுகளினதும் உயர்மட்ட அதிகாரிகள் எதிர்வரும் ஜனவரி 22ஆம் திகதி இந்தியாவின் புதுடெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

கூட்டு மீன்வளச் செயற்குழுவின் கட்டமைப்பின் கீழ் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவது மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அடித்தள இழுவைமடி மீன்பிடி முறையைப் பயன்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

உள்நாட்டு மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல், கடல் சுற்றுச்சூழல் கட்டமைப்பைப் பாதுகாத்தல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவைத் தொடர்ந்தும் பேணுதல் ஆகியவை இந்தப் பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கங்களாகும்.

இந்த விரிவான பேச்சுவார்த்தைகளில் மீன்பிடி அமைச்சு, கடற்படை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இரு நாடுகளினதும் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் இந்த இராஜதந்திர அணுகுமுறையின் ஊடாக, பாக்கு நீரிணைப் பகுதியில் நிலவும் மீனவர் பிரச்சினைக்கு நிலையானதும் நடைமுறைக்கு ஏற்றதுமான தீர்வொன்றைக் காண முடியும் என இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here