ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணையின் அடிப்படையில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (13) உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் தொடர்பில் நீதிமன்றத்தில் விசேட காரணங்கள் எதுவும் முன்வைக்கப்படாத நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சந்தேகநபருக்கு எதிராக உடனடியாகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கையிடுமாறும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதன்போது நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகியன இணைந்து மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், ஒருங்கிணைந்த குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
சந்தேகநபர்களுக்கு எதிராக நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்து, மூன்று நீதிபதிகள் முன்னிலையில் வழக்கு விசாரணையை நடத்துவதற்காக பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.
இதற்கமைய, இந்த வழக்கு இனிமேல் குறித்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
