யோசித ராஷபக்ஷவுக்கு எதிராக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கிலிருந்து, அவரின் பாட்டியார் டெய்ஸி ஃபொரஸ்ட் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லை என்ற சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னரே, இந்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வழங்கியது.
இவர் யோசித ராஜபக்ஷின் தாயார் சிரந்தி ராஜபக்ஷவின் தாயாருடைய சகோதரியாவார். தற்போது இவருக்கு 98 வயதாகிறது.
யோசித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கில் 2013ஆம் ஆண்டு 5.9 கோடி ரூபாய் இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது. பணம் தொடர்பான விசாரணையின் போது, டெய்ஸி ஃபாரஸ்டும் இணை வங்கிக் கணக்குதாரராக இருந்தமை தெரியவந்தது.
கொழும்பு மவுண்ட் லவீனியா பகுதியில் 2013ஆம் ஆண்டு சுமார் 30 பேர்ச் காணியை டெய்ஸி ஃபொரஸ்ட் கொள்வனவு செய்தார். பின்னர், அந்தக் காணியை யோசிதவுக்கு அவர் அன்பளிப்பாக வழங்கினார்.
இவை தொடர்பான வழக்கு, நடந்து வரும் நிலையில்தான், அவரின் வைத்தியச் சான்றிதழ் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை என, மன்றில் சமர்ப்பிப்புச் செய்யப்பட்டது.
இதனைப் பரிசீலித்த நீதிமன்றம் – டெய்ஸி ஃபொரஸ்ட் -ஐ, வழக்கிலிருந்து விடுவித்துள்ளது.
இதேவேளை, தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அதே நீதிமன்றில் இன்று யோசித ராஜபக்ஷ மறுத்துள்ளார்.
