EXCLUSIVE:-பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத் திட்டத்தில் பாரிய டெண்டர் மோசடி இடம்பெறுவதாகக் குற்றச்சாட்டு!

0
37

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத் திட்டம் (BIA Terminal 2) தொடர்பில் பாரிய டெண்டர் மோசடி இடம்பெறுவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஜப்பானின் தைசெய் (Taisei Corporation) நிறுவனம், ஆரம்பத்தில் சமர்ப்பித்த டெண்டர் விலையை விட 190 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகையை மேலதிகமாகக் கோரியுள்ளதாகவும், விமான நிலையத்திற்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளர் குறித்த நிறுவனத்திற்குச் சாதகமான வகையில் பேச்சுவார்த்தைகளில் தீவிரமாகத் தலையிட்டு வருவதாகவும் பாரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் மிகவும் கவலைக்குரிய விடயம், விலை அதிகரிப்பு மாத்திரமல்ல. நாட்டின் நிதி மற்றும் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ள உயர்மட்ட அரச அதிகாரியின் செயற்பாடுகளும் தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளன.

பேச்சுவார்த்தை நடைமுறை தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களின்படி, அமைச்சின் செயலாளர் தைசெய் நிறுவனத்தின் வர்த்தக நலன்களுக்காகச் செயற்பட்டு வருவதாகவும், அரசாங்கத்தின் உள்விவகாரங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் குறித்த நிறுவனத்தின் பங்கேற்பை எளிதாக்கியுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், தொழில்நுட்ப மதிப்பீட்டு அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி இந்த விலை அதிகரிப்புக்கு அனுமதி பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மக்களின் வரிப்பணத்தைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரி, மேலதிகமாக 190 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கோரும் ஒப்பந்த நிறுவனத்தின் பிரதிநிதியாகச் செயற்படுகிறாரா என்ற கேள்வியும் இங்கு எழுந்துள்ளது.

இந்தச் செயற்பாடுகளின் பாரதூரத் தன்மையைக் கருத்திற்கொண்டு, இது தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஆறு தொழில்நுட்ப மதிப்பீட்டு அதிகாரிகளின் எதிர்ப்பு – ஆனால் அமைச்சின் செயலாளருக்கு அதுபற்றி கவலையில்லையா?

இந்த விவகாரத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய விடயம் என்னவெனில், முன்மொழியப்பட்ட விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்குவதற்கு தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் (TEC) ஆறு உறுப்பினர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவலாகும்.

சுயாதீனமான தொழில்நுட்ப மதிப்பீட்டு நடைமுறையின் ஊடாக உரிய முடிவுக்கு வருவதற்கு இடமளிப்பதற்குப் பதிலாக, அமைச்சின் செயலாளர் இந்த எதிர்ப்புகளையும் ஆட்சேபனைகளையும் மீறி நடவடிக்கைகளை முன்னெடுக்க முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இது உறுதிப்படுத்தப்பட்டால், அரச கொள்முதல் நடைமுறையின் கட்டுப்பாட்டு முறைமையில் ஏற்பட்டுள்ள பாரிய மற்றும் ஆபத்தான வீழ்ச்சியை இது வெளிப்படுத்தும்.

தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுக்கள் என்பது உயர்மட்ட அதிகாரிகள் ஏற்கனவே எடுத்துள்ள முடிவுகளுக்கு வெறுமனே முத்திரையிடுவதற்காக அமைக்கப்பட்ட பெயரளவிலான குழுக்கள் அல்ல.

சுயாதீனமான தொழில்நுட்ப மற்றும் வர்த்தக மதிப்பீடுகளின் ஊடாக அரசாங்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதே அவற்றின் பொறுப்பாகும்.

பொருத்தமற்ற விலை அதிகரிப்பை ஏற்றுக்கொள்ளுமாறு குழு உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தால், அது தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட்டு உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

250 மில்லியன் டொலர்கள் குறைவாகக் கோரிய ஏலதாரர் நிராகரிப்பு – தற்போது மேலும் 190 மில்லியன் டொலர்கள் கோரப்படுகிறதா?

இந்த டெண்டருக்காக ஜப்பானின் தைசெய் நிறுவனம் (Taisei Corporation) மற்றும் சோஜிட்ஸ் – லார்சன் அண்ட் டூப்ரோ (Sojitz–Larsen & Toubro) கூட்டமைப்பு ஆகியவை போட்டியிட்டன.

இதன்போது Sojitz–L&T கூட்டமைப்பு தொழில்நுட்ப ரீதியாகத் தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்யவில்லை (Technically Non-Responsive) என அறிவிக்கப்பட்டதையடுத்து, தைசெய் நிறுவனம் மாத்திரமே தகுதிபெற்ற ஏலதாரராக எஞ்சியது.

பின்னர், இந்தத் தெரிவு நடைமுறைக்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகமான JICA நிறுவனமும் இணக்கம் தெரிவித்தது.

எவ்வாறாயினும், நிராகரிக்கப்பட்ட மற்றைய ஏலதாரரின் விலை, தைசெய் நிறுவனத்தின் விலையை விட சுமார் 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் குறைவாக இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஒரே தகுதிபெற்ற ஏலதாரராக எஞ்சியுள்ள தைசெய் நிறுவனம் மேலும் 190 மில்லியன் அமெரிக்க டொலர்களை மேலதிகமாகக் கோருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரண்டு தொகைகளும் உறுதிப்படுத்தப்பட்டால், நிராகரிக்கப்பட்ட ஏலத்தொகைக்கும் தைசெய் நிறுவனத்தின் முன்மொழியப்பட்ட திருத்தப்பட்ட விலைக்கும் இடையிலான மொத்த வித்தியாசம் 440 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற பாரிய தொகையை எட்டும்.

குறைந்த விலையை முன்வைத்த ஏலம் தொழில்நுட்ப ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது என்பதற்கு இது ஆதாரமாக அமையாவிட்டாலும், தவிர்க்க முடியாத ஒரு கேள்வியை எழுப்புகிறது.

இந்தக் கொள்முதல் நடைமுறையின் ஊடாக இலங்கைக்கு உண்மையிலேயே சிறந்த பெறுமதி கிடைத்துள்ளதா?

மத்திய கிழக்கு நெருக்கடி ஒரு சாக்காகப் பயன்படுத்தப்படுகிறதா?

இந்த மேலதிகத் தொகையைக் கோருவதற்கான காரணமாக மத்திய கிழக்கு நெருக்கடியினால் கட்டுமானச் செலவுகள் அதிகரித்துள்ளதாக தைசெய் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புவிசார் அரசியல் நெருக்கடிகளினால் போக்குவரத்து, எரிசக்தி, காப்புறுதி மற்றும் கட்டுமானப் பொருட்களின் செலவுகள் அதிகரிக்கக்கூடும்.

எனினும், இத்தகைய செலவு அதிகரிப்புகள் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்பட்ட செலவுக் கணக்கீடுகள் மூலம் நிரூபிக்கப்பட வேண்டும்.

அத்துடன், தைசெய் நிறுவனம் ஆரம்பத்தில் சமர்ப்பித்த விலையே 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்தப்பட்டிருந்ததாகவும், மத்திய கிழக்கு நெருக்கடியினால் ஏற்பட்ட மொத்த செலவுத் தாக்கம் தற்போது கோரப்படும் மேலதிகத் தொகையை விடக் கணிசமாகக் குறைவானதாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கூற்றுகள் தொடர்பில் சுயாதீனமான உறுதிப்படுத்தல் அவசியமாகும்.

இலங்கையின் அரச கொள்முதல் முறைமையானது ஏல விலைத் திருத்தங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஒப்பந்த நிறுவனமொன்றின் வர்த்தகக் கோரிக்கைகள், போட்டித்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பணத்திற்கான பெறுமதி ஆகிய அடிப்படைக் கொள்கைகளை மீற முடியாது.

இரண்டாவது முனையத்தின் கட்டுமானப் பணிகளை விரைவாக நிறைவு செய்ய வேண்டிய அவசியத்தைப் பயன்படுத்தி, இலங்கை வரி செலுத்துவோரிடமிருந்து நியாயமற்ற மேலதிகத் தொகையைப் பெற்றுக்கொள்வதற்கான கருவியாக இதனை மாற்ற முடியாது.

ஜனாதிபதி அவர்களே! ஊழல் எதிர்ப்பு வாக்குறுதியை நிரூபிப்பதற்கான உண்மையான சோதனை இதுவாகும்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், ஊழல், அரசியல் செல்வாக்கு மற்றும் பொதுமக்களின் நிதி முறைகேடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதாக வலுவான வாக்குறுதிகளை முன்வைத்தே ஆட்சிக்கு வந்தது.

ஆனால், தற்போதைய சர்ச்சை மற்றுமொரு ஆபத்தான சந்தேகத்தை எழுப்புகிறது.

ஆட்சிகள் மாறினாலும், கேள்விக்குரிய அரச கொள்முதல் நடைமுறைகளும் செல்வாக்குச் செலுத்தும் வலையமைப்புகளும் தொடர்ந்து நீடிக்கக்கூடும் என்பதே அந்தச் சந்தேகமாகும்.

ஜனாதிபதி தற்போது இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும்.

அறிக்கைகளில் குறிப்பிடப்படும் 190 மில்லியன் அமெரிக்க டொலர் விலை அதிகரிப்பைச் சுயாதீனமான மீளாய்வு நிறைவடையும் வரை இடைநிறுத்த வேண்டும்.

தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களின் எதிர்ப்புகள் விசாரிக்கப்பட வேண்டும். அமைச்சின் செயலாளரின் தலையீடுகள் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

அதேபோன்று, போட்டித்தன்மையுடன் சமர்ப்பிக்கப்பட்ட ஏலங்கள், அவற்றின் மதிப்பீடுகள் மற்றும் பேச்சுவார்த்தைக் குறிப்புகள் அனைத்தும் மிகக் கவனமாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட புதிய ஏலக் கோரல் நடைமுறையின் (Rebidding Process) ஊடாக மீண்டும் போட்டித்தன்மையை ஏற்படுத்தி கணிசமான தொகையைச் சேமிக்க முடியுமா என்பது தொடர்பில் அரசாங்கம் JICA நிறுவனத்துடன் கலந்துரையாடி மதிப்பீடு செய்ய வேண்டும்.

நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்களைப் பாதுகாப்பதற்காக மேலும் மூன்று மாதங்கள் செலவிட வேண்டியிருந்தாலும், அது ஒரு சிறிய தியாகமேயாகும்.

இது முக்கியமான தேசியத் திட்டமொன்றைத் தாமதப்படுத்துவது அல்லது இலங்கைக்கு ஜப்பான் தொடர்ந்து வழங்கிவரும் ஒத்துழைப்பைப் பாதிப்பது தொடர்பான பிரச்சினை அல்ல.

பொருத்தமற்ற தலையீடுகளின்றி, நியாயமான விலையில் விமான நிலையத்தை நிர்மாணிப்பதை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

190 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது மேலும் பல முக்கிய தேசிய உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதியளிக்கப் போதுமான தொகையாகும்.

கேள்விக்குரிய பேச்சுவார்த்தைகளின் ஊடாக இலங்கை இத்தகைய பெருந்தொகையை இழக்க அனுமதிக்க முடியாது.

அமைச்சின் செயலாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் எதிர்ப்புகள் தொடர்பில் நியாயமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அனைத்து தரப்பினருக்கும் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும்.

ஆனால், அதிக விலையில் திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும் வரை காத்திருப்பது இத்தகைய கண்காணிப்பு நடவடிக்கைகளின் நோக்கத்தை நிறைவேற்றாது.

ஜனாதிபதி அவர்களே!

இந்தக் கேள்விக்குரிய விலை அதிகரிப்பை உடனடியாகத் தடுத்து நிறுத்துங்கள்.

தொழில்நுட்ப மதிப்பீட்டு அதிகாரிகளைப் பாதுகாத்திடுங்கள்.

இடம்பெற்றதாகக் கூறப்படும் தலையீடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுங்கள்.

அரச கொள்முதல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை மீண்டும் உறுதிப்படுத்துங்கள்.

மக்களின் பணத்தைப் பாதுகாத்திடுங்கள்.

ஊழலுக்கு எதிராகப் போராடுவதாக உங்கள் அரசாங்கம் வாக்குறுதி அளித்தது.

அந்த வாக்குறுதியைச் செயலின் மூலம் நிரூபிப்பதற்குக் கிடைத்துள்ள சந்தர்ப்பம் இதுவாகும்.

முழு நாடும் இதனை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here