– அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி
நவம்பர் 12ஆம் திகதி ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மறுநாள் LAUGFS எரிவாயு நிறுவனம் விலையை அதிகரித்தமை அரசியல் சதித்திட்டம் என கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
நேற்று (14) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையின் எரிவாயுச் சந்தையில் 90 சதவீதத்தை லிட்ரோ நிறுவனம் வழங்குகிறது. அரசுக்குச் சொந்தமான லிட்ரோ நிறுவனம் மாதாந்தம் சுமார் 20 இலட்சம் நீல நிற எரிவாயு சிலிண்டர்களை நிரப்பி விநியோகிக்கிறது. அதேவேளை, மஞ்சள் நிற LAUGFS எரிவாயு சிலிண்டர்கள் மாதாந்தம் சுமார் 3 இலட்சம் மட்டுமே நிரப்பப்படுகின்றன.
தற்போது விலை அதிகரிப்பு ஏற்பட்டிருந்தால், அது தனியார் துறையைச் சேர்ந்த LAUGFS நிறுவனத்தின் மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டர்களிலேயே ஏற்பட்டுள்ளது.
அரசாங்கம் முன்னர் LAUGFS நிறுவனத்திற்கு வழங்கிய அனுமதியின் அடிப்படையில், அதன் எரிவாயு விநியோகத்தில் 60 சதவீதத்தை ஏற்றுமதி செய்யவும், 40 சதவீதத்தை உள்நாட்டுச் சந்தைக்கு விநியோகிக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், 2019ஆம் ஆண்டு முதல் அந்த நிறுவனம் உரிய விநியோக நடைமுறையைப் பின்பற்றவில்லை.
அரச நிறுவனமான லிட்ரோ உள்நாட்டுச் சந்தைக்கு வரி செலுத்தி எரிவாயுவை விநியோகிக்கிறது. ஆனால், LAUGFS நிறுவனம் முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் (BOI) சலுகைகள் மற்றும் வரிச் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு, உள்நாட்டுச் சந்தைக்கு வரியின்றி எரிவாயுவை விற்பனை செய்யக் கோருகிறது. இது முறையான நடைமுறையல்ல.
அந்த நிறுவனத்திற்கு தற்போது சுமார் 10 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த காலங்களில் கிடைத்த அரசியல் சலுகைகள் தற்போது கிடைக்காததே அதன் நெருக்கடிக்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்குப் பல நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிவாரணங்கள் தொடர்பான கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கிலேயே மறுநாள் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பான விவகாரம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
எரிவாயு விலை அதிகரிப்பினால் மக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதைத் தாம் ஏற்றுக்கொள்வதாகவும், அந்தப் பிரச்சினைக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
உண்மையில், எரிவாயு சிலிண்டரின் நிறத்தைப் பொருட்படுத்தாமல் மக்கள் தமக்குப் பிடித்தமான நிறுவனத்தின் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ளும் வகையில் ஒரு முறைமையை உருவாக்க வேண்டும். அதற்காக அரசாங்கத்தின் எரிவாயு சேமிப்புத் தொட்டிகளின் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை லிட்ரோ நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.
இது முழு நாட்டையும் பாதிக்கும் எரிவாயு நெருக்கடி அல்ல. தற்போது LAUGFS நிறுவனத்தின் சுமார் 3 இலட்சம் சிலிண்டர்களைப் பயன்படுத்தும் மக்களையே நேரடியாகப் பாதிக்கிறது. அதுவும் ஒரு பிரச்சினை என்பதை நாம் அறிவோம். ஆனால், இதனைப் பயன்படுத்தி பெரியதொரு நெருக்கடியை உருவாக்க முயற்சிக்கப்படுகிறது” என அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
