இலங்கையில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் ஆறு மாதங்களுக்கு தேவையான 500 மில்லியன் யுவான் பெறுமதியான உயிர்காக்கும் மருந்துகளை இரண்டு கட்டங்களாக இலங்கைக்கு வழங்கவுள்ளதாக, கொழும்பிலுள்ள சீன தூதரகம், நேற்று (02) அறிவித்தது.
கிட்டத்தட்ட 54 கோடி இலங்கை ரூபாய் பெறுமதியான 512,640 எனோக்ஸாபிரின் சோடியம் மருந்துகள் மற்றும் சிரிஞ்சுகளையே சீனா வழங்கவுள்ளது.
குருதி உறைதல் எதிர்ப்பு மருந்தான (குருதியை மெல்லியதாக மாற்றும்) எனோக்ஸாபிரின் சோடியம், மாரடைப்பு, நரம்பு இரத்த உறைவு மற்றும் சில சத்திரசிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
256,320 மருந்து மற்றும் சிரிஞ்சுகளைக் கொண்ட அதன்முதல் தொகுதி இன்று (03) நள்ளிரவு இலங்கையை வந்தடையும் என்றும் மற்றைய தெகுதி இம்மாத நடுப்பகுதிக்குள் விநியோகிக்கப்படும் என்றும் சீன தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்களுடன் சீனா ஆழமாக தொடர்பு கொண்டுள்ளது என தூதரகம் தெரிவித்துள்ளது.
பீஜிங் மற்றும் கொழும்புடன் தொடர்ந்து நெருக்கமாகச் செயல்பட்டு முக்கியமான இருதரப்பு உடன்படிக்கையைப் பின்பற்றி இலங்கை மக்களுக்கு மிகவும் தேவையான வாழ்வாதார உதவிகளை தூதரகம் முதன்மை முன்னுரிமையாக வழங்கும் என்றும் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.