மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீண்டும் தோற்கடிப்பு.

0
139

மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம்  ஒரு மேலதிக வாக்குகளால் 2 ஆவது தடவையாகவும்  இன்று வெள்ளிக்கிழமை (31) தோற்கடிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட கூட்டமானது  இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 2.30 மணியளவில்   மன்னார் பிரதேச சபையின்  தவிசாளர் எஸ்.எச்.எம்.முஹாஜிர் தலைமையில் இடம்பெற்றது.

தவிசாளரின் தலைமை உரையைத் தொடர்ந்து பிரதேச சபையின் செயலாளரினால் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையினை வாசிக்க முற்பட்ட போது  வரவு செலவு திட்ட அறிக்கையை தாங்கள் எதிர்ப்பதாக மன்னார் பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் பிரேரணையை சபையில் கொண்டு வந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் முன் மொழிந்து வழி மொழிந்தனர்.

இதேவேளை இவ் வரவு செலவு திட்டத்தை தாங்கள் ஆதரிப்பதாக தமிழர் விடுதலைக்கூட்டனி உறுப்பினர் முன்மொழிய அதை  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் வழிமொழிந்தார்.

இதனைத்  தொடர்ந்து சபையின் தவிசாளரினால் வரவு செலவுத் திட்டம் பகிரங்க வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதன் போது   தமிழ்தேசிய கூட்டமைப்பு 7 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 2 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த தலா ஒரு உறுப்பினர்களுமாக  மொத்தம் 11 உறுப்பினர்கள் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக்கூட்டனி உறுப்பினர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் தலா ஒருவர் வீதம் 2022 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக   10 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இவ் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக ஒரு மேலதிக வாக்கு வித்தியாசத்தில்  2 ஆவது தடவையாகவும்
மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்  தோற்கடிக்கப்பட்டது.

கடந்த 27 ஆம் திகதி (27-12-2021) மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சபையில் முதலாவது தடவையாக  சமர்ப்பிக்கப்பட்ட போது ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்ட நிலையில் நேற்றைய  தினம்  2 ஆவது தடவையாக சமர்ப்பிக்கப்பட்ட போதும்  தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மன்னார் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தவிசாளர் பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here