வரும் ஜனவரி 7ஆம் திகதி இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர த்விவேதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று (4) அறிவித்துள்ளது.
இரு நாள் அதிகாரப்பூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தரும் ஜெனரல் உபேந்திர த்விவேதி, இலங்கை இராணுவத் தளபதி, பாதுகாப்பு துணை அமைச்சர், பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட பல மூத்த இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்புகளின் போது, பயிற்சி ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த விஜயத்தின் போது இந்திய இராணுவத் தளபதி, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி (DSCSC) அதிகாரிகளை சந்திப்பதுடன், புத்தலத்தில் அமைந்துள்ள இராணுவப் போர் கல்லூரியின் அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்களையும் சந்திக்க உள்ளார்.
அத்துடன், கொழும்பில் அமைந்துள்ள இந்திய அமைதிப்படை நினைவுச்சின்னத்திற்கு மலரஞ்சலி செலுத்தவும் இந்திய இராணுவத் தளபதி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
