“இலங்கையில் நீண்டகாலமாகப் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை விரைந்து காண வேண்டும். அது வலுவான – நிரந்தர தீர்வாக இருக்க இருக்க வேண்டும். உப்புச்சப்பற்ற தீர்வை நாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று மாலை சந்திக்கும் போது வலியுறுத்தவுள்ளேன்.”
- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
“தீர்வுக்கான பேச்சில் எம்மை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்படுவோம். நாம் தமிழ் மக்களின் பிரதிநிதிகள். அவர்களின் விருப்பங்களை – கோரிக்கைகளை நாம் நிறைவேற்றியே ஆக வேண்டும். தமிழ் மக்கள் சார்பான கோரிக்கைகளையே ஜனாதிபதியிடம் கடந்த சந்திப்புகளில் முன்வைத்துள்ளோம். அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது அரசின் கடமை” – என்றும் சம்பந்தன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.
“தமிழர் தீர்வுக்கான பயணத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் செயற்படும்” என்றும் அவர் உறுதியளித்தார்.
இனப் பிரச்சினைக்கான தீர்வு பேச்சு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று மாலை சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இந்தநிலையிலேயே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இன்று மாலை 5 மணியளவில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் (தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்) ஆகியோரும் பங்குபற்றுவர் என அறியமுடிகின்றது.
இதேவேளை, இந்தச் சந்திப்பில் அரச தரப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அமைச்சர்களான அலி சப்ரி, விஜயதாஸ ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் பங்கேற்பர் என்று கூறப்படுகின்றது.
N.S