ஒமிக்ரோன் பிறழ்வு பரவி வருகின்ற நிலையில், COVID சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அங்கொடை தேசிய தொற்றுநோயியல் பிரிவு மற்றும் ஹோமாகம வைத்தியசாலை ஆகிய சிகிச்சை நிலையங்களில் நோயாளர்களின் எண்ணிக்கை கொள்ளளவு மட்டத்தை அண்மித்துள்ளது.
ஒமிக்ரோன் பரவி வருகின்ற நிலையில், தேசிய தொற்றுநோயியல் பிரிவில் நோயாளர்கள் நிரம்பி வருவதாக அதன் பணிப்பாளர் டொக்டர் ஹசித்த அத்தநாயக்க குறிப்பிட்டார்.
தீவிர கண்காணிப்பு பிரிவுகளில் அனுமதிக்கப்படுகின்ற நோயாளர்களுக்கான ஒக்சிஜன் தேவைப்பாடும் படிப்படியாக அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
ஹோமாக ஆதார வைத்தியசாலையில் COVID சிகிச்சைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு நோயாளர் விடுதிகளும் தற்போது நோயாளர்களால் நிரம்பியுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், வைத்திய நிபுணர் ஜனித்த ஹெட்டிஆரச்சி கூறினார்.
இரண்டு நோயாளர் விடுதிகளிலும் கட்டில்களின் எண்ணிக்கையை விட அதிகளவான நோயாளர்கள் தற்போது சிகிச்சைபெற்று வருவதாகவும் வைத்தியசாலை ஊழியர்களில் 23 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், கம்பஹா மாவட்டத்தில் COVID தொற்று வேகமாக பரவி வருவதாக COVID ஒழிப்பு இராஜாங்க அமைச்சர் வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார். அதற்கு அடுத்தபடியாக கொழும்பு மாவட்டத்தில் நோயாளர்கள் பதிவாகி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஜனவரி 19 ஆம் திகதியில் இருந்து ஒரு வார காலத்திற்குள் இலங்கையில் பதிவான மொத்த COVID நோயாளர்களின் எண்ணிக்கை 5,947 ஆகும். நாளாந்தம் சராசரியாக 850 COVID நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
அதற்கு முன்னைய வாரத்தில் இலங்கையில் 4,552 COVID நோயாளர்கள் பதிவானதுடன், சராசரியாக நாளாந்தம் 650 நோயாளர்கள் பதிவாகியிருந்தனர்.
கடந்த 19 ஆம் திகதியில் இருந்து ஒரு வார காலத்தில் இலங்கையில் 99 COVID மரணங்கள் பதிவானதுடன், முன்னைய வாரத்தில் 82 COVID மரணங்கள் உறுதி செய்யப்பட்டிருந்தன.