இலங்கை – இந்தியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் விரைவில் கைச்சாத்து

0
71

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பாதுகாப்பு, கலாசாரம், கல்வித்துறை தொடர்பிலான சில உடன்படிக்கைகளை விரைவில் பூர்த்தி செய்வதற்கு வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் இந்திய விஜயத்தின் போது இணக்கம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தனது பாரத விஜயத்தை நிறைவு செய்துள்ளதுடன், இந்த விஜயத்தின் போது அவர் இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், வௌிவிவகார செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

வௌிவிவகார அமைச்சரின் இந்த விஜயத்தின் போது பொருளாதார ஒத்துழைப்புகள், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக பேராசிரியர் G.L.பீரிஸின் விஜயத்தின் பின்னர் இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கை இருதரப்பினருக்கும் வெற்றியளிக்கும் நிலைமையினை உருவாக்கியுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காற்று, சூரிய சக்தி மூலமான மின் உற்பத்தி திட்டங்கள் தொடர்பில் இந்த விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இரண்டு நாடுகளுக்குமிடையிலான மீனவர்களின் பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்காக இரண்டு தரப்பினரும் இணைந்து பொறிமுறையொன்றை விரைவில் உருவாக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இந்தியாவில் உள்ள இலங்கை உயர்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

BIMSTEC மாநாட்டிற்கு இணையாக இந்த வருடம் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அமைச்சர் G.L.பீரிஸ் இந்திய வௌிவிவகார அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன், அந்த மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்துகொள்வார் என எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here