யாழ். மேயர் வேட்பாளராகச் சிறிலைக் களமிறக்கும் தமிழரசுக் கட்சி!

0
244

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் முன்னிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் இ.ஆர்னோல்ட் இரண்டு தடவைகள் பதவியிழந்துள்ள நிலையில், அந்தக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் சொலமன் சிறிலை மேயர் வேட்பாளராக நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபையின் புதிய மேயர் தெரிவு எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறும் என்று வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் யாரைக் களமிறக்குவது என்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் யாழ். மார்ட்டின் வீதியிலுள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று கட்சித் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனும் பங்கேற்றிருந்தார்.

இதன்போது சொலமன் சிறிலை மேயர் வேட்பாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் பிரேரிப்பதற்கு ஏகமனதாக இணக்கம் காணப்பட்டது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் மேயராக இ.ஆர்னோல்ட் தெரிவானார். அவரது வரவு – செலவுத் திட்டம் இரண்டு தடவைகள் தோற்கடிக்கப்பட்டன. அதையடுத்து அவர் பதவியிழந்தார். புதிய மேயராக வி.மணிவண்ணன் தெரிவானார். அவரது பாதீடு தோற்கடிக்கப்பட்டது. மீண்டும் ஒரு தடவை பாதீட்டை முன்வைப்பதற்கான வாய்ப்பு இருந்தும் அவர் பதவி விலகினார். இதையடுத்து மீண்டும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் இ.ஆர்னோல்ட் மேயராகினார். அவர் மீண்டும் சமர்ப்பித்த வரவு – செலவுத் திட்டமும் இரண்டு தடவை தோல்வியடைந்தது. அவர் மீளவும் பதவியிழந்தார். இந்நிலையில் புதிய மேயர் தெரிவு எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதேவேளை, ஆர்னோல்ட் இரண்டாவது தடவை மேயராகத் தெரிவாகியமைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு மீண்டும் வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here