அமெரிக்காவுக்கு ரொக்கெட் இன்ஜின்களை வழங்க மாட்டோம். அந்த நாட்டு விண்வெளி வீரர்கள் இனிமேல் துடைப்பத்தில்தான் பறக்க வேண்டும் என்று ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் திமித்ரி ரகோஜின் தெரிவித்துள்ளார்.
உக்ரேன் போர் காரணமாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷ்யாவின் விண்வெளி துறை நேரடியாக பாதிக்கப்படும் என்று அமெரிக்கஅதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
இதற்கு பதிலடியாக ரஷ்ய விண்வெளி அமைப்பான ரோஸ்கோஸ்மோஸின் தலைவர்திமித்ரி ரகோஜின் கூறியிருப்பதாவது:
ரஷ்யாவின் ரொக்கெட் இன்ஜின்களே உலகத்தில் மிகச் சிறந்தவையாக போற்றப்படுகின்றன. கடந்த 1990 முதல் அமெரிக்காவுக்கு 122 ரொக்கெட் இன்ஜின்களை விநியோகம் செய்துள்ளோம். அவற்றில் 98 இன்ஜின்களை அமெரிக்க பயன்படுத்தியுள்ளது.
இப்போதைய சூழலில் அமெரிக்காவுக்கு ரஷ்ய ரொக்கெட் இன்ஜின்களை விநியோகிக்க மாட்டோம். அமெரிக்காவிடம் பயன்படுத்தப்படாமல் உள்ள ரஷ்ய ரொக்கெட் இன்ஜின்களுக்கான தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க மாட்டோம். அந்நாட்டு விண்வெளி வீரர்கள் வேறு ஏதாவது ஒன்றில் பறந்து செல்லட்டும். இனிமேல் அவர்கள துடைப்பத்தில்தான் (விண்கலம்) விண்வெளி செல்ல வேண்டும்.
சர்வதேச விண்வெளி நிலையம் உட்பட எந்தவொரு விண்வெளி திட்டங்களிலும் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட மாட்டோம். இதேபோல ஜெர்மனியுடனும் விண்வெளி, கல்வி, அறிவியல் ஆராய்ச்சியில் இணைந்து செயல்பட மாட்டோம். ரஷ்யாவின் விண்வெளி திட்டங்களில் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நாட்டின் செயற்கைக்கோள்கள் இராணுவத்துக்காக பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் செயற்கைக்கோள்கள்
பிரிட்டனின் ஒன்வெப் செயற்கைக்கோள்கள் ரஷ்ய ராக்கெட்கள் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டு வந்தன. இந்த வரிசையில் ரஷ்யாவின் பைகானூர் விண்வெளி மையத்தில் இருந்து பிரிட்டனின் 36 ஒன்வெப் செயற்கைக்கோள்கள் நேற்று முன்தினம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஒன்வெப் செயற்கைக்கோள்களை ஏவும் திட்டத்தை ரத்து செய்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது.