Sunday, January 19, 2025

Latest Posts

ஐ.எம்.எவ். முன்மொழிவுகள் பற்றிய ஜனாதிபதியுடனான சந்திப்பில் சுமந்திரன் மாத்திரம் பங்கேற்பு

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே பங்கேற்றது. அதன் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார்.

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சார்பில் எவரும் பங்கேற்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலில் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் தீர்மானங்களை எட்டுவதற்கான அரசின் அர்ப்பணிப்பு இங்கு வலியுறுத்தப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தால் தயாரிக்கப்பட்ட பகுப்பாய்வு தரவுகளுடன் கூடிய அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் வலியுறுத்தினார்.

இந்தச் செயற்பாடுகள் அனைத்தையும் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுப்பதே அரசின் நோக்கமாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அது தொடர்பான தரவு பகுப்பாய்வு அறிக்கைகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் நாடாளுமன்றத்துக்கும் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவதே அரசின் விருப்பம் என்று தெரிவித்த ஜனாதிபதி, இந்த முன்மொழிவுகளைச் சர்வதேச நாணய நிதியத்துடன் மேலும் கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உட்பட ஏனைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துரையாடலுக்கு அழைக்கவுள்ளார் என்றும் கூறினார்.

அந்தக் கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தில் அரசு முன்னெடுக்கும் சாதகமான மற்றும் சரியான வேலைத்திட்டத்துக்குத் தனது ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்தார்.

இருதரப்பு கடன் வழங்குநர்கள், வர்த்தகக் கடன் வழங்குநர்கள் மற்றும் சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்களுடன் நடைபெற்று வரும் பேச்சுகள் குறித்து திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, விரிவான விளக்கத்தை அளித்ததுடன், இந்தப் பேச்சுச் சுற்றுக்களை இந்த ஆண்டு ஜூன் மாத இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆளுகைத் தீர்ப்பு தொடர்பான அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசு செயற்பட்டு வருகின்றது என்றும், அதற்கான விரிவான கட்டமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நிதி இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட பலர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.