எதிர்காலத்தில் மேலும் பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இலங்கை சுங்கத்தின் வருடாந்த வருமான இலக்குகள் மீளாய்வுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
”இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நிர்ணயிக்கப்பட்ட ரூ.270 பில்லியன் இலக்கை விட 12 சதவீதம் குறைவாகவே இலங்கை சுங்கத்தால் வருமானத்தை ஈட்ட முடிந்தது. சில இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள் வருமானப் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாகும்.
நாடு எதிர்கொண்ட கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக 2021இல் 485 பொருட்களையும் 2022இல் 750 பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு இலங்கை தடை விதித்தது.
இருப்பினும், கடந்த ஆண்டின் பிற்பகுதியில் 700 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. எஞ்சியுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தப்படும்.
இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்துடன் கலந்தாலோசித்து இறக்குமதி கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு மேற்கொள்ளப்படும்” எனவும் அவர் கூறியுள்ளார்.
N.S