இலங்கை வரலாற்றில் இருண்ட நாட்களில் ஒன்றாக கருதப்படும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் (21) 4 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
ஏப்ரல் 21, 2019 அன்று, கொழும்பில் உள்ள மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் மூன்று முக்கிய சுற்றுலா ஹோட்டல்களைக் குறிவைத்து தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அன்றைய தினம் தெஹிவளை பிரதேசத்தில் உள்ள தங்கும் விடுதி மற்றும் தெமட்டகொட பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கையர்கள் குழுவினால் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
பலி எண்ணிக்கை 277 ஆக உள்ளது. அவர்களில் 45 வெளிநாட்டவர்களும் அடங்குவர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்த தாக்குதலுக்கு முன், இந்திய உளவு அமைப்புகள் இது தொடர்பான முன்னெச்சரிக்கைகளை வழங்கியதுடன், இது தொடர்பான பல தகவல்களையும் தெரிவித்திருந்தன.
ஆனால் இந்த நாட்டின் பாதுகாப்புப் படையினர் இது தொடர்பாக சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது பின்னர் தெரியவந்தது.
தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒரு குழுவினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு நீதிமன்றினால் தண்டனை விதிக்கப்பட்டிருந்தும் இதுவரை அந்தத் தண்டனைகள் நிறைவேற்றப்படவில்லை.
மேலும், இந்த தொடர் தாக்குதல்கள் தொடர்பான பல சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் அதன் விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், தொடர் தாக்குதல்களின் உண்மையான குற்றவாளி இதுவரை வெளிவரவில்லையா என்பதும் பிரச்சினையாக உள்ளது.
மேலும் இந்த தொடர் தாக்குதலை முன்கூட்டியே எச்சரித்தும் தடுக்க தவறிய அதிகாரிகளுக்கு அபராதம் விதித்தால் மட்டும் போதுமா என்பது அடுத்த கேள்வி.
277 உயிர்களை பலிவாங்கிய, 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த, ஏராளமான மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த வேதனையில் தவித்து, மரண அடியை ஏற்படுத்திய இந்த தொடர் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பது தெளிவாகிறது.
நான்கு ஆண்டுகள் என்பது நீண்ட காலம். நீதிக்காக எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?