1.இலங்கையின் இருதரப்புக் கடன் வழங்குநர்களுக்கான ஒருங்கிணைந்த கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியதை ஜப்பான் நிதியமைச்சர் சுனிச் சுசுகி (Shunichi Suzuki) வரவேற்கிறார். ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஏப்ரல் மாதத்தில் இந்த செயல்முறை தொடங்குவதாக அறிவித்தன ; “எதிர்கால கடன் நெருக்கடிகளைத் தடுக்க கடன் தரவு வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியத்தை மேம்படுத்துவது அவசியம்” என்றும் அவர் கூறுகிறார்.
2.நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நோய் பரவுவதை தடுக்க துரித நடவடிக்கைகளை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேற்கொண்டுள்ளார் : இந்த வருடத்தில் மாத்திரம் 31,098 டெங்கு நோயாளர்கள் இதுவரை பதிவாகியுள்ளனர் ; கம்பஹா மாவட்டத்திலேயே அதிகூடிய நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் (6,953) , கொழும்பில் 6,500 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
3.மஹர கிராம அலுவலர் பிரிவின் கினிகம மற்றும் அக்பர் டவுன் கிராம அலுவலர் பிரிவில் இரண்டு கொவிட்-19 தொற்று இறப்புகள் பதிவாகியுள்ளன : ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னரே இவ்வாறு இரண்டு கொவிட் தொற்று இறப்புகள் பதிவாகியுள்ளன : இறந்தவர்களில் ஒருவர் எந்தவொரு கொவிட் தடுப்பூசியையும் பெறவில்லை என்பதுடன் மற்றொன்று ஒரே ஒரு தடுப்பூசியை மாத்திரம் பெற்றுள்ளார் ; இலங்கையில் இதுவரை கொவிட் தொற்றால் 16,844 மரணங்கள் பதிவாகியுள்ளன.
4.சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதிலும் 11 மாவட்டங்களில் 2,000 குடும்பங்களைச் சேர்ந்த 9,000 பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர் : வெள்ள பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தின் கட்டான, இறப்பர் வத்த மற்றும் கோமஸ்வத்த ஆகிய பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
5.பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் ஒக்சிஜன் சிலிண்டர்களை திருடி விற்பனை செய்யும் பாரிய மோசடி கும்பலை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர் : சம்பவத்தில் தொடர்புடைய வைத்தியசாலை ஊழியர் உட்பட 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் : 2020ஆம் ஆண்டு முதல் இந்த மோசடியில் இவர்கள் ஈடுபட்டு வருவத்திகாவும் இதுவரை அரசாங்கத்திற்கு சொந்தமான 210 ஒக்சிஜன் சிலிண்டர்கள் திருடியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது : சந்தேகநபர்களை பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
6.உலகெங்கிலும் உள்ள ஹோஸ்ட்களுடன் சுற்றுலா பயணிகளை இணைக்கும் உலகளாவிய இணையத்தளமான ‘Worldpackers’ 2023இல் பயணம் செய்ய பாதுகாப்பான 13 நாடுகளில் இலங்கையும் சேர்த்துள்ளது. ஆசியாவில் இருந்து இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மட்டுமே இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளதை கண்டு மகிழ்ச்சி அடைவதாக சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
7.இந்தியாவில் இருந்து 2 மில்லியன் சுற்றுலா பயணிகளை இந்த ஆண்டு இலங்கை வரவழைக்க எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 2023இன் முதல் மூன்று மாதங்களில், 46,432 இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர். 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 530 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சுற்றுலா துறையில் ஈட்டப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 482.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளதுடன், 2023ஆம் ஆண்டில் 03 பில்லியன் அமெரிக்க டொலர்களை சுற்றுலா துறையில் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
8.முல்லைத்தீவில் இருந்து மூன்று குழந்தைகள் மற்றும் நான்கு பெண்கள் உட்பட பத்து அகதிகள் இந்தியாவின் தனுஷ்கோடியை வந்தடைந்ததாக இந்திய கடலோர பாதுகாப்பு காவல்துறை தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிகள் மற்றும் உச்சத்தைத் தொடும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் காரணமாக தாம் இவ்வாறு அகதிகளாக இந்தியாவுக்கு வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் கூறியுள்ளார். அத்துடன் தமது வாழ்வாதாரத்தை ஈட்டிக்கொள்ள வேலைவாய்ப்புகள் இலங்கையில் கிடைப்பதில்லை எனவும் அவர்கள் கடலோர கடலோர பாதுகாப்பு காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.
9.இளைஞர் சமூகத்தின் பங்களிப்பை ஊக்குவிக்கும் கல்வி சீர்திருத்தங்களை உருவாக்குவதில் பொதுநலவாய நாடுகள் முக்கிய பங்காற்ற வேண்டும் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக தொடர்பாடலை ஆதரிக்க வேண்டும் என லண்டனில் கூடிய பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
10.இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமல் ஒருநாள் மற்றும் ரி20 கிரிக்கெட்டில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ். தோனி கூறுகிறார்: பத்திரன இலங்கைக்கு ஒரு ‘பெரிய சொத்து’ என்றும் வலியுறுத்துகிறார் : நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 4 ஓவர்களை வீசிய பதிரன 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.