லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அழைப்பின்படி மே 12ஆம் திகதி அந்த ஆணைக்குழுவின் முன் ஆஜராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மறைந்த கபில சந்திரசேனவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று வந்திருந்தபோது ஊடகங்களிடம் பேசுகையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
“கபில எங்களுடைய நெருங்கிய நண்பர். அதேபோல் நாட்டிற்கு ஒரு சேவை செய்த மனிதர். அவரைப் பற்றிய எங்களுடைய அனுதாபத்தை தெரிவிக்கத்தான் வந்தேன்,” என மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள், “உங்களையும் லஞ்ச ஆணைக்குழுவுக்கு வர சொல்லியிருக்கிறார்கள். அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?” எனக் கேட்டனர்.
அதற்கு அவர்,
“லஞ்ச ஆணைக்குழுவுக்கு வரச் சொல்றாங்க இல்லையா….” என்று பதிலளித்தார்.
“12ஆம் திகதி நீங்கள் செல்வீர்களா?” என்ற கேள்விக்கு,
“போகிறேன், போகிறேன்… போக வேண்டியதுதானே… பார்ப்போம்,” என்றார்.
“இவ்வாறு அழைத்து உங்களை அடக்க முயற்சிக்கிறார்களா?” என்று கேட்கப்பட்டபோது,
“எங்களை இலகுவாக அடக்க முடியாது… எங்களுக்கு இவைகள் பழக்கமானவை,” என பதிலளித்தார்.
மகிந்த ராஜபக்ஷவை லஞ்ச ஆணைக்குழுவிற்கு அழைத்திருப்பது, SriLankan Airlines நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த காலத்தில் கபில சந்திரசேன மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய விசாரணைக்காக ஆகும்.
அதாவது, எயார்பஸ் விமானங்கள் வாங்கப்பட்ட ஒப்பந்தத்தின் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த லஞ்சத் தொகையில் ரூபாய் 6 கோடி மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாக கபில சந்திரசேன கூறியதாக லஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் அறிவித்திருந்தது.
ஆனால், கபில சந்திரசேனாவின் சட்டத்தரணி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அவரை அச்சுறுத்தி கட்டாயப்படுத்தி அந்த வாக்குமூலத்தை பெற்றதாக தெரிவித்தார்.
மேலும், அந்த வாக்குமூலம் மிரட்டலின் கீழ் பெறப்பட்டது என்று தெரிவித்து கபில சந்திரசேன நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணப் பத்திரமொன்றையும் சமர்ப்பித்திருந்தார்.
