நெல் விலை குறைவு என போராட்டம் நடத்தும் சிலர் கள்ளச்சாராய வியாபாரிகள்!

0
244

–பிரதியமைச்சர் டி.பி. சரத் குற்றச்சாட்டு

நெல்லுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை எனக் கூறி அண்மையில் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் சிலர் தங்களை விவசாயத் தலைவர்கள் எனக் கூறிக்கொண்டாலும், அவர்கள் உண்மையில் கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சும் சட்டவிரோத வியாபாரிகள் எனவும், அவர்களது சர்ச்சைக்குரிய செயல்கள் குறித்து விரைவில் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படும் எனவும் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் பிரதியமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

“பெருமளவிலான நெல் கையிருப்பு தற்போது நெல் வியாபாரிகளிடமே உள்ளது. விவசாயிகளிடமும் சிறிதளவு உள்ளது; ஆனால் அதிகமாக இல்லை. இந்நிலையில் அரசின் நெல் சந்தைப்படுத்தல் சபையைத் திறந்து விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்யத் தொடங்கினால், வியாபாரிகளும் தங்களிடம் உள்ள நெல்லை ரூ.120 என்ற விலைக்கு விற்பனை செய்ய முயல்வார்கள். அதனால் தற்போது நெல்லை கொள்வனவு செய்ய முடியாது. அடுத்த அறுவடை காலத்தில்தான் மீண்டும் கொள்வனவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அரலகன்வில நகரில் 30 பேர்கூட இல்லாத சிறிய குழுவினருடன் கிங்ஸ் நெல்சன் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டங்கள் மூலம் மக்கள் எதிர்க்கட்சிகளை ஆட்சிக்கு கொண்டு வர விரும்புகின்றனர் என சிலர் நினைக்கின்றனர். ஆனால் மக்களின் நோக்கம் அது அல்ல. மக்கள் தங்களது பிரச்சினைகளை அரசிடம் முன்வைக்கின்றனர்; அவற்றை நாங்கள் புரிந்துகொண்டு தீர்வு காண முயற்சித்து வருகிறோம்.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களால் கிராம விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை. அதுவே உண்மையான பிரச்சினையாகும். தங்களை விவசாயத் தலைவர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலரின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் குறித்து விரைவில் மக்களுக்கு வெளிப்படுத்துவோம். ஊடக நண்பர்களும் இதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த அரசாங்கத்திடமிருந்து அவர்கள் பெற்றுவரும் சலுகைகள் குறித்தும் மக்களுக்கு தெரிவிப்போம். சிலர் விவசாயத் தலைவர்கள் என்ற பெயரில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். சிலர் கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களாகவும் உள்ளனர். அதனால்தான் அரசை கவிழ்த்து, தங்களது செயல்களுக்கு ஆதரவளிக்கும் ஆட்சியை அமைக்க முயற்சிக்கின்றனர்” என்றார்.

அரலகன்வில பகுதியில் கிராமப்புற சாலை ஒன்றை புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பிரதியமைச்சர் டி.பி. சரத் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here