Sunday, September 8, 2024

Latest Posts

விடுதலைப்புலிகளின் முடிவைக் கேள்விக்குப்படுத்தும் சுமந்திரன் – துரோகிப் பட்டத்துக்குப் பயந்து உண்மைய மறைக்கவேமாட்டேன் என்று அவரே தெரிவிப்பு

https://we.tl/t-H6KfNakBSs

“2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தானே. யாராவது ஒருவர் என்னைத் துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையை வெளிப்படையாகச் சொல்வதற்கு நான் எப்போதுமே பயப்பட்டவன் அல்லன்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

‘2005 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவின் பயணத்துக்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம். அதை வட பகுதி மக்கள் இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள் என நினைக்கின்றேன்.’ – என்று ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சில தினங்களுக்கு முன்னர் சுமந்திரன் எம்.பி. கூறியிருப்பது தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மாகாணம் வாக்களிக்கவில்லை. ஆனாலும், கிழக்கு மாகாணம் வாக்களித்தது. கிழக்கு மாகாண மக்களுக்கும் அந்த அறிவித்தல் (ஜனாதிபதித் தேர்தல் புறக்கணிப்பு) கொடுத்தாலும் அங்கு மக்கள் வாக்களித்தனர்.

ஏனென்றால் அதை அமுல்படுத்துகின்ற அதிகாரம் அந்தப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இருக்கவில்லை. ஆனால், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் மக்கள் வாக்களிக்கவில்லை. எனினும், ஒருசிலர் வாக்களித்தவர்கள் என நினைக்கின்றேன்.

வாக்களித்த ஒரு சிலரும் அந்தநேரம் நூறுவீதம் ரணில் விக்கிரமசிங்கவுக்குத்தான் வாக்களித்தார்கள். ஆனபடியால் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் யாருக்கு அந்த வாக்குப் போயிருக்கும் என்பதில் எவருக்கும் எந்தவிதமான சந்தேகமும் இதுவரையில் இருந்ததில்லை.

ஆனால், இன்றைக்கு ஊடகவியலாளர்களான நீங்கள்தான் இப்படியான சந்தேகத்தை எழுப்புகின்றீர்கள். எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயத்தைக் கதைப்பதற்குப் பயந்து இதைச் சொன்னால் துரோகி என்று சொல்லிவிடுவீர்கள் எனக் கருதி ஊடகவியலாளர்களே பயந்திருக்கின்ற ஒரு சூழலைத்தான் இன்றைக்கு இங்கு கேட்கின்ற கேள்வி காட்டுகின்றதே தவிர எப்படி வாக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் என்பது தொடர்பில் மக்களுக்கு மிகத் தெளிவு இருக்கின்றது.

எனினும், நான் எப்போதுமே யாராவது ஒருவர் என்னைத் துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையைச் சொல்வதற்குப் பயப்பட்டதில்லை என்பதையும் கூறிக்கொள்கின்றேன்.” – என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.