Monday, December 23, 2024

Latest Posts

கொழும்பு மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டின் வருமான நிலுவை 6,280 மில்லியன் ரூபாய் – கோபா குழுவில் புலப்பட்டது!

கொழும்பு மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டின் வருமான நிலுவை 6,280.50 மில்லியன் ரூபாய் என அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) புலப்பட்டது.

கொழும்பு மாநகர சபையின் 2020/2021 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை செய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் (06) கூடிய போதே இந்த விடயம் புலப்பட்டது.

இதன்போது, 2021 ஆம் ஆண்டின் மொத்த நிலுவை வருமானம் 5,835.6 மில்லியன் ரூபாய் எனவும், 2020 இல் 5,386.4 மில்லியன் ரூபாய் எனவும் 2019 இல் 4,481.5 மில்லியன் ரூபாய் எனவும் இதன்போது புலப்பட்டது. இவற்றில் வரிகள், வாடகைகள் மற்றும் ஏனைய வரிகள் என்பன நிலுவையாகக் காணப்படுவதாக இதன்போது இனங்காணப்பட்டது.

அதற்கமைய, நிலுவை வரிகள் காணப்படும் சொத்துக்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், ஒரு சில சொத்துக்களின் உரிமையாளர்களை அடையாளம் காண்பதில் சிக்கல்கள் காணப்படுவதாகவும், மாநகர சபையில் இது தொடர்பில் செயற்படவேண்டிய அதிகாரிகளின் பற்றாக்குறை நிலவுவதும் இந்த நிலுவைகளை அறவிடுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

சட்டரீதியற்ற நிர்மாணங்களுக்கும் வரி இலக்கம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, 2023 ஜூலை 23 ஆம் திகதிக்குள் நிலுவைகளை அறவிடுவதற்கான திகதிகளுடன் கூடிய வேலைத்திட்டமொன்றை தயாரித்து முழுமையான அறிக்கையொன்றை கோபா குழுவுக்கு வழங்குமாறு குழு பரிந்துரைத்தது.

அத்துடன், வாகனத்தரிப்பிட கட்டணங்களை அறவிடுவதற்காக ஒப்பந்தம் செய்துகொண்ட தனியார் நிறுவனங்களினால் மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய மாதாந்த வாடகைக் கட்டணத்தை செலுத்தாமல் தொடர்ந்தும் கைவிடப்பட்டிருப்பதாகவும், 2021 டிசம்பர் 31 வரை 38 நிறுவனங்களிடமிருந்து அறவிடப்படவேண்டிய நிலுவைத் தொகை 265 மில்லியன் ரூபாய் எனவும் இதன்போது புலப்பட்டது.

மேலும், கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் இந்தப் பிரிவின் சேவையைப் பாராட்டுவதாகவும் இது இலங்கை பூராவும் பரவலடைய வேண்டும் எனவும் கோபா குழுவின் தலைவர் தெரிவித்தார். அத்துடன், 20 மாடிகள் உயரம் கொண்ட கட்டடங்களில் தீயணைப்பு செய்ய இந்தப் பிரிவுக்கு வசதிகள் காணப்படுவதாக இதன்போது குறிப்பிடப்பட்டது. 20 மாடிகளை விடவும் உயரமான கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் விமானப் படையின் உதவியைப் பெறுவது முக்கியமானது என குழுவின் தலைவர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். அதனால் விமானப்படையுடன் ஒருங்கிணைப்பை அதிகரித்துக்கொள்ளுமாறு குழுவியுன் தலைவர் ஆலோசனை வழங்கினார். மேலும், தீயணைப்புப் பிரிவில் காணப்படும் வெற்றிடங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், விளம்பர வருமானங்களை முறையாகப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, இதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் அவசியம் மற்றும் அதனை முறையாகக் கண்காணிக்கும் அவசியம் என்பன தொடர்பில் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

கொழுப்பு 07 பகுதியில் காணப்படும் காணியொன்றுக்கு வரி செலுத்துவது கைவிடப்பட்டுள்ளமை மற்றும் காணி ஆவணங்களை முறையாகப் பேணிவராமை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, இது தொடர்பான முழுமையான அறிக்கையொன்றை ஜூலை 06 ஆம் திகதிக்குள் கோபா குழுவுக்கு வழங்குமாறு குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார். அத்துடன், மேல் மாகாண மகாநகர ஆணையாளர் அலுவலகத்தின் பலவீனமான கண்காணிப்பு செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும், கொழும்பு நகரில் கழிவு நீர் முகாமைத்துவ திட்டம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், ஜூன் 21 ஆம் திகதி இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கோபா குழு கூடவுள்ளது. அன்றைய தினம் இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் குழுவின் முன்னிலையில் அழைப்பதாக கோபா குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

அதற்கு மேலதிகமாக, திண்மக் கழிவுகளை அகற்றுவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான பிரசன்ன ரணவீர, டயனா கமகே, கே. காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான அசோக் அபேசிங்க, கௌரவ ஜயந்த கெடகொட, ஹெக்டர் அப்புஹாமி, (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட, முதிதா பிரசாந்தி, எம்.டபிள்யு.டி. சஹன் பிரதீப் விதான மற்றும் வீரசுமன வீரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.