ராமேசுவரம் அருகே இலங்கையைச் சோ்ந்த இருவரை கடலோரப் பாதுகாப்புக் குழும பொலிஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மேலும், அவா்கள் வந்த படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் கடல் பகுதியில் தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புக் குழும பொலிஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, கோதண்டராமா் கோயில் கடல் பகுதியில் இலங்கை படகு ஒன்று இருப்பதைக் கண்டனா்.
இதையடுத்து, அங்கு சென்ற பொலிஸாா், படகை மடக்கிப் பிடித்து, அதிலிருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா்கள், இலங்கை புத்தளம் பகுதியைச் சோ்ந்த ஜூனியாஸ் (22), ஜூட் அந்தோணி (32) என்பதும், அவா்கள் இருவரும் தமிழ் தெரியாத சிங்களா்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும், அந்தப் படகில் சோதனை செய்த போது, மீன்பிடிக்கக் கூடிய வலைகள் ஏதும் இல்லை. இதையடுத்து, அவா்கள் இருவரையும் கடலோரப் பாதுகாப்புக் குழும ஆய்வாளா் கனகராஜ் தலைமையிலான பொலிஸாா், மண்டபம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
அவா்கள் இருவரும் மீனவா்கள் இல்லை எனத் தெரிய வந்ததால், ராமேசுவரத்துக்கு கடத்தல் பொருள்களை வாங்க வந்தாா்களா என்ற கோணத்தில் பொலிஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், அவா்கள் வந்த படகும் பறிமுதல் செய்யப்பட்டது.