தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயாதீன வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தி உள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால் பெரேரா மற்றும் சட்டத்தரணி யசஸ் டி சில்வா ஆகியோர் சில நிமிடங்களுக்கு முன்னர் இராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் கட்டுப்பணம் வைப்பிலிட்டனர்.
இதன்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றிரவு (25ம் திகதி) நாடு முழுவதும் ‘இன்று சொல்வோம் ‘ என்ற பெயரில் சுவரொட்டி பிரசார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஜனாதிபதியின் கட்டுப் பணத்தை வைப்பு செய்வது தொடர்பான பிரசார திட்டத்தின் ஒரு அங்கமே இந்த சுவரொட்டி நடவடிக்கை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாளை (27ஆம் திகதி) காலி நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக மக்கள் முன்னிலையில் ஜனாதிபதி அறிவிக்க உள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்ட இன்று (26) காலை 8.30 மணி முதல் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 14, 2024 நண்பகல் 12 மணி வரை என தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியால் வேட்பாளராக முன்மொழியப்பட்டால், 50,000 ரூபாயும், வேறு அரசியல் கட்சியால் அல்லது வாக்காளர்களால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளராக இருந்தால், 75,000 ரூபாயும் பிணையமாக செலுத்தப்பட வேண்டும்.