Wednesday, November 27, 2024

Latest Posts

ரணில் – சுமந்திரன் பேச்சில் இணக்கம்; ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு மாகாண சபைத் தேர்தல்

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வு காண்பதற்கான முன் ஆயத்தமாக சில நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதற்கு நேற்று தம்மைச் சந்தித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடம் இணக்கமும் உறுதியும் தெரிவித்திருக்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுப் பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம் பெற்றது.

இருவரும் பேசி இணக்கம் கண்ட ஏற்பாடுகளின்படி –

* மாகாண சபைத் தேர்தல் சட்டமூலம் உடனடியாக நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்து நிறைவேற்றப்படும். இது தொடர்பில் சுமந்திரன் தனிநபர் பிரேரணையாகச் சமர்ப்பித்துத் தயாராக இருக்கும் சட்டமூலம் வரும் ஓகஸ்ட் 22, 23ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

* சுமந்திரன் சமர்ப்பித்துள்ள தனிநபர் சட்டமூலம் ஏற்கனவே வர்த்தமானியில் பிரசரிக்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட்டு, நிறைவேற்றப்படுவதற்கு தயாரான நிலையில் உள்ளது. அந்தச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ள சில திருத்தங்களுடன் அதனை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினால் ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

மாகாண சபைகளில் இளைஞர், யுவதிகளுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்குவதை உறுதிப்படுத்தல், எம்.பிக்களும் அப்பதவியில் இருந்து கொண்டே மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வகை செய்தல் ஆகிய திருத்தங்கள் இந்தச் சட்டமூலத்துக்குச் செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார். சட்டமூலத்தின் குழு நிலை விவாதத்தின்போது சட்டமா அதிபரின் இணக்கத்துடன் அந்த மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிக்கலாம் என சுமந்திரன் எம்.பி. கூறியமையை ஜனாதிபதி ரணில் ஏற்றுக்கொண்டார்.

தாம் சமர்ப்பித்துள்ள மாகாண சபைகள் தேர்தல் சட்டமூலத்தை வரும் 22, 23 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் எடுத்து விவாதிப்பதற்கு அதனை நாடாளுமன்ற நிகழ்ச்சிப் பத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு தாம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தை கடிதம் மூலம் கோரியுள்ளார் என்றும், அது இன்று நாடாளுமன்ற விவகாரங்களை ஆராயும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட இருப்பதாகவும், அதற்கு அரசுத் தரப்பில் ஆதரவு கிட்டினால் விடயத்தை அந்தத் திகதியில் எடுத்து சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

அதற்கான வழிகாட்டுதல்களை சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும், அரசு தரப்பின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்கவுக்கும் தாம் வழங்குவார் என ஜனாதிபதி உறுதியளித்தார்.

அதன் பிரகாரம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு வழி செய்யும் சுமந்திரனின் தனிநபர் சட்ட மூலம் எதிர்வரும் 22, 23ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுமா என்பது குறித்து சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.

* 13ஆம் திருத்தத்தில் இருக்கும் காணி அதிகாரப் பகிர்வை மாகாண சபைகள் உடனடியாக பிரயோகிப்பதற்குத் தேசிய காணி ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும். தேசிய காணி ஆணைக்குழுவுக்கான கட்டமைப்பு தயாராக இருப்பதாகவும், அது உடனடியாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்படுவதற்கு காலதாமதம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தச் சந்திப்பின்போது உறுதி கூறினார். தேசிய காணி ஆணைக்குழு நிறுவப்பட்டு காணிகள் தொடர்பான தேசிய கொள்கைகள் வகுக்கப்பட்டால், காணிகள் நேரடியாக மாகாண நிர்வாகத்தின் கீழ் வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

* உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவும் உடனடியாக நிறுவப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

* அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் மூலம் மாகாணங்களுக்குப் பகிரப்பட்ட பல அதிகாரங்கள் காலத்துக்குக் காலம் மீளப் பெறப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக மாகாணங்களுக்கு மீளப் பகிரும் ஏற்பாடுகள் எந்தத் தாமதமுமின்றி உடனடியாகவே மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்தார்.

* 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தில் பொலிஸ் அதிகாரப் பகிர்வு உள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் எல்லாத் தரப்புகளுடனும் பேசி, இணக்கம் கண்டு, அதைச் சுமுகமாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கூறினார்

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.