நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து தரப்பினரும் பேதமின்றி ஒன்றிணையுமாறு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் மக்கள் போராட்டம் முடிந்து விட்டதாகவும், தற்போது நாட்டை கட்டியெழுப்புவதற்கான பொருளாதாரப் போராட்டம் இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி வலியுறுத்துகிறார். சுகததாச விளையாட்டரங்கில் நேற்று (06) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 76வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் சந்தித்திராத நெருக்கடியை இன்று எதிர்கொண்டுள்ளதாகவும், அனைவரும் ஒன்றிணைந்து தீர்வு காண்பதைத் தவிர வேறு வழியில்லை எனவும் திரு.விக்கிரமசிங்க குறிப்பிடுகின்றார். நாட்டின் கணிசமான சதவீத மக்கள் மூன்று வேளையும் சாப்பிட முடியாத நிலையில் இருப்பதாகவும், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்காவது ஜனாதிபதி என அவர் கூறலாம், ஆனால் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற குழு தமக்கு இல்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தனக்கு பொதுஜன பெரமுன உட்பட பல கட்சிகளின் ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நாட்டை கட்டியெழுப்புவதே தமது நோக்கமாகும் எனவும், அதற்காக சகல முயற்சிகளையும் மேற்கொள்ள தயங்கப் போவதில்லை எனவும் திரு.விக்கிரமசிங்க குறிப்பிடுகின்றார்.