Tuesday, September 17, 2024

Latest Posts

வரிசை யுகம் வேண்டுமா? நல்ல எதிர்காலம் வேண்டுமா? ரணில் கேள்வி

”இரண்டு வருடங்களுக்கு முன்னர் குடும்பமாக ஒவ்வொரு வரிசைகளில் நின்றோம். ரூபா பெறுமதி வீழ்ச்சி கண்டது. வியாபாரங்கள் மூட்டப்பட்டு தொழில்களை இழக்க நேரிட்டது. மக்கள் கஷ்டங்களை மறந்திருக்க வாய்ப்பில்லை. மீண்டும் அந்த யுகம் வேண்டுமா? நல்ல எதிர்காலம் வேண்டுமா? என்பதை எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்.”

  • இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

யாழ். உடுப்பிட்டி பிரதேசத்தில் நேற்று (07) சனிக்கிழமை மாலை நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

வடக்குப் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக அரசு முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு எடுத்துரைத்த ஜனாதிபதி, மாகாண சபை முறைமையை மீண்டும் பலப்படுத்தி ஒவ்வொரு மாகாணத்துக்கும் விரிவான அபிவிருத்தியை வழங்குவதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

“அன்று நாங்கள் அரசமைத்தபோது அநுரவும் சஜித்தும் இருக்கவில்லை. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவவும் இல்லை. இப்போது அவர்களால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்கின்றனர். எல்லாவற்றையும் சீர்குலைக்கவே முயற்சிக்கின்றனர். கஷ்டப்பட்டு 2 வருடங்களில் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டோம்.

சில சமயங்களில் கஷ்டமான தீர்மானங்களை எடுத்தோம். வரிசை அதிகரித்து செலவைக் குறைத்தோம். மக்கள் கஷ்டங்களை ஏற்றுக்கொண்டனர். சிறந்த எதிர்காலம் கிடைக்கும் என்று மக்கள் நம்பினர். எனவே, மீண்டும் வரிசை யுகம் தேவையில்லை. எனவே, முன்னோக்கிச் செல்வோம்.

ஐ.எம்.எப் அமைப்புடன் ஆலோசித்து அவர்களின் நிபந்தனைகள் பிரகாரம் செயலாற்றினோம். அதன் பலனான ரூபா வலுவடைந்தது. அதனால் பொருட்களின் விலை குறைந்திருக்கின்றது. அந்தச் சலுகை மக்களுக்கும் கிடைக்கின்றது. வீட்டின் கஷ்டங்களைப் பெண்களே அறிவர். பொருட்களின் விலை குறைந்ததால் அஸ்வெசும நிவாரணம் வழங்கினோம்.

அதேபோன்று பொருளாதாரம் தற்போது மேலும் வலுவடைந்திருக்கின்றது. தனியார் துறையில் சம்பள அதிகரிப்பு கிடைத்தது. அரச ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பு கிடைத்தது. அடுத்த வருடத்தில் மேலும் அதிகரிப்போம். அரச ஊழியர்கள் பெரும் சுமைகளைத் தாங்கிக்கொண்டனர்.

அதனால் இன்று வாழ்க்கைச் சுமை சற்று குறைந்திருக்கின்றது. இத்தோடு விட்டுவிடாமல் மக்கள் சுமையை மேலும் குறைப்போம். கஷ்டப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவேன். மக்களுக்கு காணி உறுதிகளைத் தந்திருக்கின்றேன். ஒரு சிலருக்குக் கிடைக்கவில்லை தேர்தலின் பின் அந்தத் திட்டம் தொடரும்.

அடுத்த ஐந்து வருடங்களில் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவோம். கல்வியைப் பலப்படுத்துவோம். அதற்கான வேலைத்திட்டங்கள் என்னிடம் உள்ளன. அதனால்தான் ‘இயலும் ஸ்ரீலங்கா’ என்று சொல்கின்றேன். அநுரவும் சஜித்தும் திட்டங்கள் இல்லாததால் இயலாது ஸ்ரீலங்கா என்றே சொல்லில்கொள்ள வேண்டும்.

நாட்டில் வரிகளைக் குறைத்தால் மீண்டும் பணத்தை அச்சிட நேரிடும். அதனால் ஐ.எம்.எப். சலுகைகள் கிடைக்காது. அதனைச் செய்ய வேண்டுமா? எனவே, ரூபாவின் பெறுமதியை அதிகரிப்பதே எனது தேவையாகும். 2023 முன்னெடுத்த திட்டங்களுக்கு தற்போது பலன் கிடைக்கிறது. 2024 இ்ல் செய்தவைக்கு அடுத்த வருடம் தீர்வு கிடைக்கும்.

விரும்பியவருக்கு வாக்களிக்கும் உரிமை வடக்கு மக்களுக்கு உண்டு. அந்த உரிமையைப் பாதுகாப்போம். எனவே செப்டெம்பர் 21 சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது அபிவிருத்தியும் வராது.” – என்றார்.

இந்து மதத் தலைவர்கள், பிரதேச அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்ட இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரும் உரையாற்றினர்

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.