Sunday, October 6, 2024

Latest Posts

மக்கள் என்னை வெல்ல வைப்பர் – சஜித் நம்பிக்கை

“யார் எதைச் செய்தாலும் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.”

  • இவ்வாறு ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நுவரெலியா – தலவாக்கலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“இந்த ஜனாதிபதியே அவரின் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். அநுரகுமாரவின் பிரத்தியேகச் செயலாளராகுவதற்கு அவர் விருப்பப்படுகின்றார். தற்போது ஜனாதிபதியும் அநுரகுமாரவும் ஒன்றாக இணைந்து என்னைத் தோல்வியடையச் செய்வதற்காக பணத்தைச் செலவிடுகின்றார்கள். யார் எதைச் செய்தாலும் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

200 வருடங்களுக்கும் அதிகமான வரலாற்றைக் கொண்ட இந்தத் தோட்டத் தொழிலாளர்கள் வியர்வை சிந்தி, கண்ணீர் வடித்து, இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு வழங்குகின்ற ஒத்துழைப்பை மறக்க முடியாது. இந்தப் பக்கபலம் குறித்து நாம் பெருமைப்பட்டு அவர்களுக்கு நன்றி கூறி கௌரவப்படுத்துகின்றோம். அத்தோடு இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் அவர்களைச் சமமான முறையில் ஏற்றுக்கொள்கின்றோம்.

தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் ரீதியான தகுதியான பிரதிநிதித்துவத்தை வழங்குவதோடு, காணிக்கான, வீட்டுக்கான உரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கு உறுதி பூண்டு, லயன் அறைகளுக்குப் பதிலாக தனியான குடியிருப்புக் கிராமங்களை அமைத்துக் கொடுப்பதற்கான அடித்தளத்தை இடுவோம்.

தோட்டத் தொழிலாளர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவோம். தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபா, 1500 ரூபா, 2000 ரூபாவாக வழங்குவோம், பெற்றுத் தருவோம் எனத் தேர்தல் காலங்களில் பொய் வாக்குறுதிகளை வழங்குகின்றார்கள். லயன் அறைகளில் வாழ்ந்து கூலித் தொழிலில் வாழ்க்கையைக் கழிக்கின்ற இந்த மக்களுக்காகவும், இந்த இளைஞர்களுக்காகவும் விவசாயக் காணியை வழங்கி, சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவோம்.

அத்தோடு விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை 5 ஆயிரம் ரூபாவுக்கு வழங்குவோம் என்று நாம் கூறியபோது இந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதனை 4 ஆயிரம் ரூபாவுக்கு வழங்குவோம் எனச் சொல்லிக்கொண்டு திரிகின்றார்.

ஆரம்பப் பாடசாலை முதல் கல்வித்துறையை மேம்படுத்துவதோடு சகல வசதிகளையும் வழங்குவோம். சிறந்த கல்வியை வழங்குவதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். பாடசாலைக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதோடு பல புதிய தேசிய பாடசாலைகளையும் உருவாக்குவோம். சிங்களம், தமிழ், முஸ்லிம், பேக்கர் அனைவருக்கும் கல்வியிலும் சுகாதாரத்துறையிலும் முன்னேற்றத்தைக் கொண்டு வருவோம்.

தகவல் தொழில்நுட்பம், கணினி விஞ்ஞானம், திறன் விருத்தி கல்வி போன்றவற்றை நடைமுறைப்படுத்தி, சர்வதேச மட்டத்திலான தொழிற்பயிற்சி நிலையங்களையும் உருவாக்கி இளைஞர்களை அறிவு ரீதியாக உயர்த்துவோம். அத்தோடு நுவரெலியா இளைஞர்களுக்காகப் புதிய பல்கலைக்கழகம் ஒன்றையும் உருவாக்குவோம். அதன் ஊடாக புத்தாக்கத்துறையைக் கற்பித்து புதிய வர்த்தக முறைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்போம்.” – என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.