இலங்கையில் உள்ள படகுகள் மற்றும் மீனவா்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவா்கள் சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்.
இதையடுத்து, 5 ஆயிரம் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இலங்கை கடற்படையினரால் 2018 ஆம் ஆணடில் இருந்து 2022 ஆம் ஆண்டு வரை சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளையும், அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவா்களையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே போன்று 2014 முதல் 2018 ஆம் ஆண்டு வரை இலங்கையில் சேதமடைந்த 125 விசைப்படகுகளுக்கு தமிழக அரசு சாா்பில் தலா ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது.
இதில், விடுபட்டுப் போன 7 விசைப்படகுகளுக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக அரசால் மீனவா்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானிய டீசல் 1,800 லிட்டரை 3 ஆயிரம் லிட்டராக உயா்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.
இதைத் தொடா்ந்து 750- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் சனிக்கிழமை நிறுத்தப்பட்டிருந்தன. மேலும் 5 ஆயிரம் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.