பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக கூறி போர் தொடுத்திருக்கும் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் அவர்கள் மறைவிடங்களில் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் 11-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இதை முடிவுக்கு கொண்டு வர ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.
இது குறித்து ரஷியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசியல் மற்றும் பேச்சுவார்த்தை மூலமாக இந்த போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர அதிபர் விளாடிமிர் புதின் விரும்புகிறார். இது குறித்து அவர் இஸ்ரேல் அதிபர், அரபு நாடுகளின் தலைவர்கள், ஈரான் நாட்டு அதிபர் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். நேற்று, அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இது மட்டுமின்றி மத்திய தரைகடல் பகுதி தலைவர்களுடனும் அவர் தொடர்பில் உள்ளார். ஈரான், எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் புதின் நடத்திய பேச்சு வார்த்தை விவரங்களை இஸ்ரேல் பிரதமருடன் அவர் பகிர்ந்து கொண்டார். மனிதாபிமான அடிப்படையில் காசாவில் உள்ள மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உதவிகள் தடையின்றி கிடைக்க தற்காலிக போர் நிறுத்தம் தேவை என புதின் கருதுகிறார்.
இந்த அறிக்கையில் ஐ.நா. கூட்டமைப்பின் பாதுகாப்பு சபை முன் ரஷியா முன்மொழிய கொண்டு வந்த தீர்மானம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இஸ்ரேல் ஹமாஸ் போர் விரைவில் முடிவுக்கு வருவது நல்லது என்பதால் புதினின் முயற்சியை அரசியல் விமர்சகர்களில் ஒரு சாரார் ஆதரிக்கின்றனர். தனது அண்டை நாடான உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஆக்ரமிப்பு மற்றும் அது தொடர்பாக இரு நாடுகளுக்கும் நடைபெறும் போரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார சீரழிவு குறித்து உலக நாடுகளின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சியாகவும் மற்றுமொரு சாரார் ரஷியாவின் இந்த முயற்சியை பார்க்கின்றனர்.