Saturday, January 18, 2025

Latest Posts

‘நிகழ் நிலைக்காப்புச் சட்டமூலம்’ – பொய்யான தகவல்களை வழங்கிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ள நிகழ் நிலைக்காப்புச் சட்டமூலம் தொடர்பில், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவல்களுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தகவல் அதிகாரி போலியான தகவல்களை வழங்கியிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

இணையங்கள் ஊடாக ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக எனக்கூறிக்கொண்டு அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள நிகழ் நிலைக்காப்புச் சட்டமூலமானது, அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 50 மனுக்கள் மீதான விசாரணை இன்று (18) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், நிகழ் நிலைக்காப்புச் சட்டமூலத்தை தயாரித்த குழு தொடர்பான தகவல்களை வழங்கக்கோரி, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சட்டக்கல்லூரி மாணவரும் செயற்பாட்டாளருமான அநுருத்த பண்டார பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிடம் தகவல் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.

இந்தத் தகவல் கோரிக்கைக்குப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு போலியான தகவல்களை வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 04ஆம் திகதி அநுருத்த பண்டாரவால் விண்ணப்பிக்கப்பட்ட தகவல் கோரிக்கையில், “நிகழ் நிலைக்காப்புச் சட்டமூலத்தை தயாரித்த குழுவின் உறுப்பினர்கள் யார்” என கேட்கப்பட்ட கேள்விக்கு 12 உறுப்பினர்களின் தகவல்களை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வழங்கியிருக்கிறது.

குழுவின் உறுப்பினர்கள் யார்?

  1. ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்திரதிஸ்ஸ
  2. ஜயந்த பெர்ணான்டோ
  3. ஜனாதிபதி சட்டத்தரணி ஜகத் விக்ரமநாயக்க
  4. பேராசிரியர் எச்.ஏ.எம்.ஹகீம்
  5. சட்டத்தரணி சஞ்சித் சேனாநாயக்க
  6. சட்டத்தரணி சேஹான் டி சில்வா
  7. சட்டத்தரணி சமிந்த அத்துகோரள
  8. சட்டத்தரணி சிந்தக்க அமரசிங்க
  9. சட்டத்தரணி ருவந்த கூரே
  10. சட்டத்தரணி செஹானி அல்விஸ்
  11. சட்டத்தரணி சிந்தக்க பெர்ணான்டோ
  12. சட்டத்தரணி அஸ்வினி ஹபன்கம என்கி 12 உறுப்பினர்களின் பெயர் விவரங்களே வழங்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவல் பொய் என்றும் “பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சால் குறிப்பிடப்பட்டுள்ள குழுவை நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை” என ஜனாதிபதி சட்டத்தரணிகளான நளிந்த இந்திரதிஸ்ஸ, ஜகத் விக்ரமநாயக்க மற்றும் சட்டத்தரணி ஜயந்த பெர்ணான்டோ இணைய ஊடகமொன்றுக்கு உறுதி செய்துள்ளனர்.

“அலி சப்ரி நீதி அமைச்சராக இருந்தபோது சட்டமூலம் ஒன்றை தயாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அக்குழுவின் தலைவராகவே நான் இருந்தேன். இந்த குழுவில் Protection from Online Falsehoods and Manipulation Bill என்கிற சட்டமூலமே தயாரிக்கப்பட இருந்தது.

எவ்வாறாயினும், இச்சட்டமூலத்தை தயாரிக்கும்போது முன்வைக்கப்பட்ட சில யோசனைகள் மற்றும் பொலிஸாருக்கு அதிகளவான அதிகாரங்களை வழங்க வேண்டும் என்கிற பரிந்துரைகள் காரணமாக இக்குழுவிலிருந்து 2022ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் திகதி உத்தியோகபூர்வமாக விலகியிருந்தேன்.

இதுபற்றி நீதி அமைச்சின் தொடர்பாடல் அதிகாரியாக அப்போதிருந்த ஹிமாலி கொதலாவலவுக்கு அறிவித்திருந்தேன்.” என ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்திரதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

“பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சால் நியமிக்கப்பட்ட எந்தவொரு குழுவிலும் நான் இல்லை. அலி சப்ரி நீதி அமைச்சராக இருந்தபோது நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து நான் விலகிவிட்டேன்.

சர்வஜன வாக்கெடுப்பின்றி இதுபோன்ற சட்டமூலம் (நிகழ் நிலைக்காப்புச் சட்ட மூலம்) சமர்ப்பிக்க முடியாது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சால் நியமிக்கப்பட்ட எந்தவொரு குழுவிலும் நான் உறுப்பினராக இருக்கவில்லை.” என சட்டத்தரணி ஜயந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

நிகழ் நிலைக்காப்புச் சட்ட மூலத்தை அமைச்சரவையில் யோசனையாக முன்வைத்தது யார்?

இச்சட்டமூலம் யாருடைய யோசனையாக முன்வைக்கப்பட்டது என்கிற அநுருத்த பண்டாரவின் கேள்விக்கு, “வெகுசன ஊடக அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர் ஒன்றிணைந்து, 2020/cab Memo/J/L/107 என்கிற இலக்கத்தைக் கொண்ட அமைச்சரவை பத்திரமாக 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 01ஆம் திகதி இதனை சமர்ப்பித்திருந்தார்கள்.” எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பதில் வழங்கியிருக்கிறது.

அலி சப்ரி நீதி அமைச்சராக இருந்தபோது நியமிக்கப்பட்ட குழுவின் தகவல்களையே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, அநுருத்த பண்டாரவின் RTI விண்ணப்பத்துக்குப் பதிலாக வழங்கியிருக்கிறது.

இதனூடாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தகவல் அதிகாரியால் 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகலறியும் உரிமைச் சட்டத்தின் 39ஆவது பிரிவு மீறப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.

சர்ச்சைக்குரிய நிகழ் நிலைக்காப்புச் சட்ட மூலம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் கடந்த செப்டெம்பர் 15ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருந்தது. ஒக்டோபர் 3ஆம் திகதி பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இச்சட்டமூலம் சேர்க்கப்பட்டிருந்தது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.