Sunday, December 22, 2024

Latest Posts

பலஸ்தீன மக்கள் பாதிக்கப்படுவதை அங்கீகரிக்க முடியாது ; ஜனாதிபதி

அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதும், ஒவ்வொரு பிரஜைக்கும் சம உரிமை வழங்குவதும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் பலஸ்தீன மக்களை பலிக்கடா ஆக்குவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அந்தப் பிரதேசங்களில் மோதல்களை தடுத்து அமைதியை நிலைநாட்ட ஐ.நா பொதுச்செயலாளரின் வேலைத்திட்டத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மன்னார் முசலி தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் நேற்று (22) முற்பகல் இடம்பெற்ற தேசிய மீலாதுன் நபி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சமய கலாசார அலுவல்கள் அமைச்சும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன. நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, முஸ்லிம் சமய மற்றும் கலாசார முறைப்படி மாணவர்கள் அன்புடன் வரவேற்றனர்.

தேசிய மீலாதுன் நபி விழாவின் சிறப்புரை அஷ்ஷெய்க் பி. நிஹ்மத்துல்லாஹ் மௌலவி அவர்களால் ஆற்றப்பட்டது.

தேசிய மீலாதுன் நபி விழா 2023க்கான நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் அட்டையும் வெளியிடப்பட்டதுடன், தபால் மா அதிபர் ருவன் சத்குமாரவினால் ஜனாதிபதிக்கு முதல் முத்திரை மற்றும் முதல் நாள் அட்டை வழங்கப்பட்டது.

தேசிய மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட விசேட நினைவுச் சின்னம் மற்றும் “மன்னார் மாவட்ட வரலாறு” நூலும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

நபிநாயகத்தின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைத்தார்.

மேலும் மன்னார் மாவட்ட பள்ளிவாசல்களில் நீண்டகாலம் பணியாற்றிய மௌலவிமார்களுக்கு கௌரவ விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன், பிரதேசத்திற்கு அளப்பரிய சேவையாற்றிய பேராசிரியர் மர்ஹூம் ஹஸ்புல்லாஹ் அவர்களுக்காக நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

புத்தளம் பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவருக்கும் புத்தளம் மாவட்ட ஜம்இயதுல் உலமா அமைப்பின் தலைவருக்கும் நினைவு பரிசுகள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் சார்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

இன்று நாம் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். மன்னார் மாவட்டத்தில் நான் கலந்துகொண்ட இரண்டாவது சமய விழா இதுவாகும். சில மாதங்களுக்கு முன்னர் மடு தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டோம். இந்த நிகழ்வை பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்தமைக்காக சமய கலாசார அலுவல்கள் அமைச்சுக்கும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்நிகழ்வுடன் இங்கு புதிய பாடசாலை கட்டிடத் திறப்பு, வீட்டுத்திட்டம் போன்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்திற்கு இந்த அபிவிருத்தி தேவை. இந்தப் பகுதி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதி. எனவே இந்தப் பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றோம்.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் வீதிகள் அமைப்பது தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடி வருகின்றோம். அமைச்சர் பாராளுமன்றத்திலும் அதை ஞாபகப்படுத்துகிறார். குறிப்பாக இப்பிரதேசத்தில் வீடுகளை நிர்மாணிப்பது போன்று கல்வியும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். மன்னார் நகரில் கல்வி சிறப்பாக உள்ளது. ஆனால் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள கல்வி நிலை குறித்து திருப்தி அடைய முடியாது.

அத்துடன், இப்பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டத்தையும் திட்டமிட்டுள்ளோம். இந்தியாவிற்கும் மன்னாருக்கும் இடையில் கடல் போக்குவரத்து சேவையை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காங்கேசந்துறையில் ஆரம்பித்தோம். அடுத்து தலைமன்னாரில் ஆரம்பிக்கப்படும். அதேநேரம் இந்தியாவும் இலங்கையும் இணைந்த மின்சாரக் கட்டமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளன. அது இந்த மன்னார் ஊடாகவும் இடம்பெறுகின்றது என்பதை நான் கூற விரும்புகின்றேன்.

இது வெறும் ஆரம்பம் தான். இதன் மூலம் எதிர்காலத்தில் மன்னார் அபிவிருத்தி அடையும். குறிப்பாக இந்த பகுதியில் பசுமை பொருளாதாரம் மற்றும் பசுமை வலுசக்தி ஆற்றல் அதிக சாத்தியம் உள்ளது. இங்கு கிடைக்கும் சூரிய சக்தியை கொண்டு இப்பகுதியை மேம்படுத்த முடியும். புத்தளத்திலிருந்து மன்னார் வரை யாழ் குடாநாட்டின் ஊடாக முல்லைத்தீவு வரை அந்த வாய்ப்பு உள்ளது. இதன் மையமாக பூனரின் நகரை உருவாக்க நாம் எதிர்பார்த்துள்ளோம்.

மேலும் மன்னாரை சுற்றுலா மையமாக மாற்ற நாங்கள் விரும்புகிறோம். அதேநேரம் மீன்பிடி தொழில் வளர்ச்சியடையும் போது மன்னாரும் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடையும்.

இன்று நாம் இங்கு நபி நாயகத்தை நினைவு கூர்வோம். நபிகள் நாயகம் அவர்கள் கூறிய அதே கோட்பாடுதான் இன்று இலங்கையில் உள்ளது. எனவே இந்த விழாவை தேசிய விழாவாக கருதுகிறோம்.

அனைத்து மதங்களையும் சமமாக நடத்துவதே எங்கள் கொள்கை. மேலும் அனைவருக்கும் சம உரிமை வழங்குவதே எங்கள் நோக்கம். இங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு சில பிரச்சினைகள் உள்ளன. அரசும் அவற்றைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நான் வங்குரோத்தான நாட்டையே பொறுப்பேற்றேன். அந்த வங்குரோத்து நிலையில் இருந்து இன்னும் மீண்டு வருகிறோம். எனவே, அந்த பணியை முறையாக மேற்கொள்ள உள்ளோம்.

இன்றைக்கு மொராக்கோ முதல் இந்தோனேஷியா வரை ஆபிரிக்கா, ஐரோப்பா என எல்லா இடங்களிலும் நபிகளாரின் இஸ்லாமியக் கோட்பாடு பரவியுள்ளது. நபிகளார் இந்தக் கோட்பாட்டைப் பிரச்சாரம் செய்தபோது, எல்லா கிறிஸ்தவ யூதர்களும் அந்தப் பகுதியில் வாழ்ந்தார்கள். எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. ஆனால் இன்று பெரிய பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக, பலஸ்தீன விவகாரம் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அதற்கு முன்னதாகவே அரசாங்கம் தனது கருத்தை தெரிவித்திருந்தது. பாராளுமன்றத்திலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 20 உணவு லாரிகள் காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக கேள்விப்பட்டோம். ஆனால் இது போதுமா என்ற கேள்வி எழுகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக பலஸ்தீன மக்கள் காஸா பகுதியில் சிக்கித் தவிக்கின்றனர். அந்த மக்களின் துயரத்தை நாங்கள் அங்கீகரிக்க முடியாது. அந்த மக்களுக்கு தேவையான உணவுகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உணவு எகிப்திலிருந்து வழங்கப்படுகின்றது. இஸ்ரேல் பகுதியில் இருந்தும் உணவு வழங்கப்பட வேண்டும். மேலும் தண்ணீர் கொடுக்க வேண்டும்.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் ஒரு பிரச்சினை. ஆனால் இந்தப் போராட்டத்தில் சாதாரண பலஸ்தீன மக்கள் பலியாகிவிடக் கூடாது. எனவே அதனை தீர்க்க எகிப்து உள்ளிட்ட அரபு நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. மற்ற நாடுகளும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன. குறிப்பாக இந்தப் பிரச்சினையைத் தீர்த்து அந்தப் பிரதேசங்களில் அமைதியை ஏற்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் செயற்பாடுகளுக்கு, எமது பூரண ஆதரவை வழங்குவோம் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். பலஸ்தீன நாடு ஒன்று உருவாக வேண்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும் என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.