வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய பகுதியில் நிலைகொண்டிருந்த ‘அர்னாப்’ (Arnab) தீவிர புயல் மேலும் வலுப்பெற்று மிகத் தீவிர புயலாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (ஒக்டோபர் 27) அதிகாலை 2.30 மணியளவில், வட அட்சரேகை 15.9° மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 85.4° அருகே, காங்கேசன்துறையிலிருந்து சுமார் 890 கிலோமீற்றர் வடகிழக்கில் இந்தப் புயல் மையம் கொண்டிருந்தது.
இன்று மாலை 5.30 மணி வரை மேற்கு திசையைச் சார்ந்த வடமேற்குத் திசையில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் பின்னர் வடமேற்குத் திசையில் நகர்ந்து, நாளை (ஒக்டோபர் 28) காலை 11.30 மணியளவில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடந்து இந்திய நிலப்பரப்புக்குள் செல்லக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு நேரடியான பாதிப்பு இல்லை
இந்தப் புயல் கட்டமைப்பினால் இலங்கைக்கு நேரடியான பாதிப்பு ஏற்படாது எனினும், புயலை நோக்கி வீசும் காற்றோட்டம் இலங்கையின் ஊடாகச் செல்வதால், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் இன்றும் மழை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, இன்று மேல் மாகாணம், சபரகமுவ மாகாணம், தென் மாகாணம், வடமேல் மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இந்தப் பகுதிகளின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் இடையிடையே பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
