ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு மகாநாயக்க தேரர்கள் இதுவரை அரசிடம் கோரிக்கை விடுக்கவில்லை

0
25

– அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு மகாநாயக்க தேரர்கள் இதுவரை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (27) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்தாலும், அரசாங்கம் எப்போதும் நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டத்தின்படியே செயற்படும் என்றும், சட்டத்திற்கு மேலாகச் சென்று எந்தவொரு மாற்றத்தையும் மேற்கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், ஞானசார தேரர் தொடர்பாக மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் முன்னதாக சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், சிறைச்சாலைகளின் நிலையான உத்தரவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அந்தத் திருத்தப்பட்ட உத்தரவுகளுக்கு அமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:

மூன்று பௌத்த பீடங்களையும் சேர்ந்த நான்கு மகாநாயக்க தேரர்கள் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், அதற்கு அடுத்த நாளே மகாநாயக்க தேரர்களின் பிரதிநிதிகள், அனுநாயக்க தேரர்கள் மற்றும் பதிவாளர் தேரர்கள் உள்ளிட்டோருடன் விசேட கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

அந்தக் கலந்துரையாடலின் விளைவாகவே சிறைச்சாலைகளின் நிலையான உத்தரவுகளில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் இணக்கம் எட்டப்பட்டது. மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைய நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் முடிவிலேயே இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

எனவே, எதிர்காலத்தில் திருத்தப்பட்ட நிலையான உத்தரவுகளுக்கு அமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மகாநாயக்க தேரர்கள் முன்வைத்த விடயங்களின் அடிப்படையில் இதுவரை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

“நடைமுறையிலுள்ள சட்டத்தின்படியே அரசாங்கம் செயற்படுகிறது. அனைவரும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம். நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, நீதித்துறைக்கு மேலாகச் சென்று மாற்றியமைக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை” என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here